Published : 19 Dec 2017 11:24 AM
Last Updated : 19 Dec 2017 11:24 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்!

அதாவது, கண்ணனே.. உன் சிறு வயிற்றில் உலகு ஏழினையும் அடக்கவல்லவன். கண்ணனே கடல், பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு என எல்லாமாக இருக்கிறான். இதையெல்லாம் உணர்ந்த ஆண்டாள், பெருங்கடலாக உள்ள கண்ணனே, மழைக்கடவுளே! நீ எதனையும் மூடி மறைக்காதே. நீ கடலில் மூழ்கி, நீரை முகர்ந்து எடுத்து வானத்திற்குச் சென்று, இவ்வுலகம் படைப்பதற்கு முன்னர், பிரளய காலத்தில் ஓர் ஆலிலையில் சிறியவனாக, பாலகனாக, கடலிலே மிதந்த கண்ணனைப் போன்ற கரிய உருவம் கொண்ட மேகங்களாக மாறி, அழகிய தோள்களை உடைய பத்மநாபன் (தாமரையை தன் தொப்புளில் தாங்கியவன்) திருமாலின் கையில் உள்ள சக்கரத்தைப் போல், ஒளி வீச வேண்டும்.

அவனது மற்றொரு கையில் உள்ள சங்கத்தின் த்வனி போன்று இடியோசை இடவேண்டும். மற்றொரு கையிலிருக்கும் சாரங்கம் எனும் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல், சீறிப் பாயவேண்டும். அதன்பொருட்டு, இவ்வுலகம் இன்பமுற வேண்டும். எனவே மார்கழி நீராடி, மழை வேண்டி கண்ணனை நோக்கி நோன்பு நோற்போம் வாரீர் என ஆண்டாள் அழைக்கிறாள்.

இந்தப் பாடலை மழை தேவை என்கிற போது கூட்டுப் பிரார்த்தனையாகப் பாடினால், மழை நிச்சயம் வரும் என்பது பெரியோரின் அனுபவம். கடல் நீர், ஆவியாகி, பிறகு மேகங்களாகி பிறகு மழையாக வர்ஷிக்கும் என்பது அறிவியல் உண்மை. அதை ஆண்டாள், தன் சிறுவயதிலேயே கையாண்டிருப்பது ஆண்டாளின் இறை ஞானம்.

இதை மெய்யுருகிப் பாடுங்கள். பாசுரம் பாடிய பலனை, இந்த பூமிக்கு மழையென அருளிச் செய்வார் பரந்தாமன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x