Published : 08 Feb 2018 15:17 pm

Updated : 08 Feb 2018 15:22 pm

 

Published : 08 Feb 2018 03:17 PM
Last Updated : 08 Feb 2018 03:22 PM

யானைகளின் வருகை 128: வெட்டப்பட்ட 600 சந்தன மரங்கள்

128-600

திருப்பூர் மாவட்டம் உடுமலை தென்கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது அமராவதி வனப்பகுதி. வன விலங்குகள் நடமாட்டதைப் பற்றி அறிய இங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் நாட்டுத் துப்பாக்கியோடு உலாவும் ஒருவரும், அவருக்கு முன்னே சாக்குப்பையுடன் நடக்கும் ஒருவரும், வேறு சிலரும் பதிவாகியிருந்தனர் அப்போது.


வனத்துக்குள் சுற்றித்திரியும் இந்த நபர்கள், சந்தனக்கட்டை கடத்தும் கும்பலோ, மான்வேட்டை அல்லது வனவிலங்குகள் வேட்டை நடத்தும் கும்பலா அல்லது நக்சல், தமிழ் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத அமைப்புகளை சார்ந்தவர்களா என்று சந்தேகம் தெரிவித்து தேடுதல் வேட்டையைத் துரிதமாக்கினர் அதிகாரிகள்.

இருபதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் களத்தில் இறங்கி, இங்குள்ள ஆதிவாசிகள் கிராமங்களில் இந்த மர்ம நபர்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரிக்க ஆரம்பித்தனர். இவர்களைப் பற்றி துப்பு கொடுக்கிறவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்தனர். தொடர்ந்து யாரும் அகப்படாததால் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீஸார் மூலம் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் இங்குள்ள ஆதிவாசி மக்களிடம் இந்த விவகாரம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் புறப்பட்டன. 'இப்படி மர்ம நபர்கள் நடமாட்டம் காடுகளுக்குள் இருப்பதும், அவர்கள் இங்குள்ள சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதும், வனவிலங்கு வேட்டைகளில் ஈடுபடுவதும் இன்று நேற்றல்ல; காடுகள் எப்போது உருவானதோ அப்போதிருந்தே இருக்கிறது. அது இங்குள்ள வன அதிகாரிகளுக்கு தெரியாததும் அல்ல!' என்பதுதான் அவர்கள் வெளிப்பாட்டின் சாராம்சம்.

கேரளப் பகுதிகளில் சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் சிறு தொழிற்கூடங்கள் அதிகம் உள்ளன. கேரளத்தில் சந்தன மரம் வளர்க்கவும், விற்பனை செய்யவும் தமிழகம் போல் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. எனவே இங்குள்ள சந்தன மரங்களை வெட்டி கேரளத்துக்கு கொண்டுபோய் கொழுத்த காசு பார்க்கும் கும்பல் கேரளத்தின் மறையூர், மூணாறு பகுதிகளில் மிக அதிகம். சில சந்தன மாஃபியாக்கள் இங்குள்ள வனத்துறையினரையே கைக்குள் போட்டு இந்த செயலை செய்வதும் உண்டு. இவர்களுக்கு இங்குள்ள ஆதிவாசி மக்களும் பணத்துக்காக உதவுவது நிறைய நடந்துள்ளது.

இந்த நேரத்தில்தான் இந்த வனச் சரணாலயம் புலிகள் காப்பகமாக மாறியது. அதன் பேரில் வனப்பாதுகாப்பும் கடுமையாக்கப்பட்டது. என்றாலும் இங்கே நடக்கும் கடத்தல், சமூக விரோத செயல்கள் மட்டும் நிற்கவேயில்லை. அதில் ஒன்றாக 2011-ம் ஆண்டு பொள்ளாச்சி ஆழியாறு பகுதி ஒரு சம்பவம் நடந்தது. இங்கே தென்னை மட்டைகள் ஏற்றிய சரக்கு டெம்போ ஒன்றை வனத்துறையினர் மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். உடனே அதிலிருந்த டிரைவர் உள்ளிட்ட ஆறு பேரும் எட்டிக் குதித்து தப்பி ஓடிவிட்டனர். டெம்போவில் இருந்த தென்னை மட்டைகளை கலைத்துப் பார்த்தால் 620 கிலோ சந்தனக்கட்டைகள். அந்த டெம்போ எங்கிருந்து வந்தது என்பதை பற்றி புலனாய்வில் அதிகாரிகள் இறங்க அது குழிப்பட்டி, மாவடப்பு, குருமலை பகுதிகளில்தான் கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் இந்த இடத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சந்தன மரங்களி்ன் இலைகளும் சிம்பும், சிமிறுகளுமே கிடக்க, புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலரே ஸ்பாட் விசாரணைக்கு வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து இங்கே கிடந்த சந்தன மர சிம்பு, சிமிறுகளை வெட்டி அடுக்கி குடோனுக்கு கொண்டு போய் எடை போட்டுள்ளனர். அதுமட்டும் 12.5 டன் எடை இருந்தது.

கடத்தல்காரர்கள் வெட்டிப் போட்ட சிம்பும் சிமிறுமே இந்த அளவு என்றால் விளைஞ்ச மரம் எத்தனை டன் இருந்திருக்கும்? ஒரு கிலோ சந்தனக்கட்டை ரூ.2,000 விலை போகிறது. அப்படியென்றால் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட சந்தன மரங்கள் எத்தனை கோடிகள் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகளே ஆச்சர்யப்பட்டனர்.

இது சந்தன வீரப்பனை விட மாபெரும் சந்தனக் கொள்ளையர்கள் செய்த வேலை என்று கருதி அதிரடிப்படை ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் ஒரு குழு, இந்த மலைக்காடுளை நான்கு நாட்களுக்கு மேல் ஊடுருவி சோதனை செய்தது. இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் விசாரிக்கப்பட்டார்கள். சிலர் கைதும் செய்யப்பட்டார்கள். ஆனால் அசல் சந்தன மாஃபியாக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

''இந்த சமூக விரோத செயல்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இங்கே நூற்றுக்கணக்கான குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. அதில் ஒன்றிரண்டு மட்டுமே பிடிபடுகிறது. பெயரளவிலேயே அதன்மீது வழக்கும் போடப்படுகிறது. வனத்தைக் காப்பாற்ற வேண்டிய வனத்துறை, வனவிலங்குகளை கண்காணித்து காடுகளில் பல்லுயிர் பெருக்கத்தை நிலைநாட்ட வேண்டிய காவலர்கள் இந்த சமூக விரோதச் செயல்களை ஒடுக்குவதற்கு பதில் மேலும், மேலும் வளரவே உறுதுணை புரிந்தால் காடுகள் எப்படியிருக்கும்? வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழையாமல் என்ன செய்யும் நீலகிரி மலைக்காடுகளில் நடப்பதை விடவும் இங்கே கூடுதல் சமூக விரோதச் செயல்கள் நடப்பதே இங்கே மனித மிருக மோதல் அதிகரிப்பதற்கான காரணம்!'' என்கிறார் இதையொட்டி நம்மிடம் பேசிய வால்பாறை இயற்கை ஆர்வலர் ஒருவர்.

இந்த சமூக விரோத செயல்கள் பலவும் இங்குள்ள மலைமக்கள் துணையோடும், சில எஸ்டேட் கூலிகள் மூலமும்தான் நடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கான பொருளாதார நெருக்கடியை அரசும், வனத்துறையும், தனியார் எஸ்டேட் நிர்வாகங்களும்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து அவர்கள் விடுபட அரசும், அதிகார வர்க்கமும் என்ன முயற்சி எடுத்திருக்கிறது? அவர்களின் பிள்ளைகளுக்கு எந்த அளவு கல்வி அறிவு தரப்படுகிறது? அதன் மூலம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது என்று பார்த்தால் பலன் பூஜ்யமாகவே இருக்கிறது.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறையில் அமைந்துள்ள சில பழங்குடியின மலை கிராமங்களுக்கு செல்லும் நிலை எனக்கு ஏற்பட்டது. அதில் கிடைத்த அனுபவங்கள் அதிர்ச்சிக்குரியது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளி வருகைப்பதிவேட்டில் பிரசென்ட் போட்டுவிட்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

வால்பாறை போகும் வழியில் காடாம்பாறை பிரிவிலிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் சென்றால் எட்டுவது அப்பர் ஆழியாறு அணை. இங்கு மேலும் கீழுமாக தெரியும் பள்ளத்தாக்குகள், மலைக்குன்றுகள் முழுக்க ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குள் வருகிறது. இது திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியாகும். யானைகள், புலிகள், சிறுத்தைகள், வரையாடு, புள்ளிமான், கலைமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனாந்தர பகுதிக்குள் இரண்டு சக்கர வாகனத்தில் உடுமலை பத்திரிகை நண்பர் சேகருடன் குதித்து குதித்து பயணித்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது.

போகிற வழியில் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் அப்பர் ஆழியாறில் தன் தாயுடன் காத்திருந்தாள். பொள்ளாச்சியில் ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருப்பதாகவும், வர உள்ளதாகவும் தெரிவித்தார். தன்னை குழிப்பட்டியிலிருந்து ஊர்க்காரர்கள் தொட்டில் கட்டித் தூக்கிக் கொண்டு இங்கே விட்டுவிட்டுச் சென்றதாகவும் கலக்கத்துடன் பேசினார் கர்ப்பிணியின் தாய்.

அப்பர் ஆழியாறிலிருந்து இருபது கி.மீ தூரம் பயணித்தால் எட்டுவது குழிப்பட்டி. கல்லும் கரடுமான ஒற்றையடிப்பாதை. அண்ணாந்து பார்த்தால் ஒரு பக்கம் மலை. இன்னொரு பக்கம் எட்டிப் பார்த்தால் பெரும் பள்ளத்தாக்கு. தலைகுப்புற விழுந்தால் கருமாதிக்கு எலும்பு கூட கிடைக்காது. 20 கிலோமீட்டர் பயணத்தில் பல இடங்களில் வண்டியைப் போட்டுவிட்டு நானும் நண்பரும் விழுந்திருந்தோம். கை-கால்களில் எல்லாம் சிராய்ப்புக் காயங்கள். ''அடிக்கடி நான் வரும் வழிதான். ஆனாலும் விழுந்து எந்திரிக்கிறேன்னா இந்த இடம் எவ்வளவு மோசம்னு பாருங்க!'' என சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தார் சேகர்.

குழிப்பட்டி கிராமமே விநோதமாகத்தான் இருந்தது. மூங்கில்களைப் பிளந்து வேயப்பட்ட சுவர்கள். அதில் களிமண் பூசி அமைக்கப்பட்டிருந்தது. அந்த மலைமக்கள் குடியிருப்புகளுக்குள் சென்றபோது பெரிய மனித தோரணையில் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் சின்னஞ்சிறு சிறுவர்களும், எண்ணெய் காணாத செம்பட்டை தலையுடன் சிறுமிகளும் இருந்தனர்.

ஊருக்குள் முதன்மையாக பள்ளிக்கூடமே வீற்றிருந்தது. ஆனால் பூட்டிக்கிடந்தது. பள்ளிக்கூடம் போகலையா? என்று எதிர்ப்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் கேட்டபோது, 'வாத்தியார்மாரே வர்றதில்லை. நாங்க எங்கே படிக்கப்போறது?' என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தார்கள்.

ஊர்மக்களிடம் பேசியபோது, ''இந்த பள்ளிக்கூடத்துக்கு ஆறு மாசத்துக்கு ஒருவாட்டியோ என்னவோ, ஒரே ஒரு வாத்தியாரம்மா வரும். புள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்புங்கன்னு கேட்கும். இதுக எதுவும் போகாது. அந்தம்மா சாக்லெட் மிட்டாய்க நிறைய கொண்டு வரும். பிள்ளைகளுக்கு கொடுத்துட்டு வந்த ஜீப்புல ஏறி புறப்பட்டுடும்!" என்றனர் அப்பாவியாக.

மீண்டும் பேசலாம்...


தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author