Published : 14 Dec 2017 12:20 PM
Last Updated : 14 Dec 2017 12:20 PM

யானைகளின் வருகை 100: பக்ரீத் பண்டிகைக்கு கறியான மான்கள்

பக்ரீத் பண்டிகைக்கு நம்ம ஊர் இஸ்லாமியர் வீடுகளில் ஆடு, மாடுகள்தான் கசாப்புக்கு போகும். வடநாட்டில் ஒட்டகங்கள் அறுபடும். ஆனால் கூடலூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு மான்கறியும் கடத்தப்படுவது வாடிக்கையானது. அது 2005-ம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது வெளிப்பட்டது.

கூடலூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவாலா காட்டிமட்டம் பகுதி. ஒரு காலத்தில் காட்டுமாடுகளாக திரியும் இடமாதலால் இதற்கு காட்டி மட்டம் என்றே பெயர் பெற்றது. இங்கிருந்து காலங்காலமாக காட்டு மாடுகள் வேட்டையர்களால் கொல்லப்படுவதும், அவை காட்டி இறைச்சியாக கேரள சந்தைகளில் விற்கப்படுவதும் சகஜமாகிப் போனது. அங்கே அது சகஜமாக, இங்கே காட்டுமாடுகள் என்பதே அரிதாகிப் போனது.

'காட்டி'யையே ஒரு வழியாக்கும் வேட்டையர்கள், அழகிய, கொழுகொழு மான்களை மட்டும் விட்டு வைப்பார்களா? தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால் அவற்றின் நடமாட்டமும் காட்டி மட்டத்தில் அரிதாகிப்போனது. அதுவும் இந்த சூழ்நிலையில் 20.01.2005-ம் தேதியன்று இந்த காட்டி மட்டத்திலிருந்து ஒரு வெள்ளை நிற மாருதி கார் புறப்பட்டிருக்கிறது. இதை மதியம் ஒரு மணிவாக்கில் நாடுகாணி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி சோதித்துள்ளனர் வனவர்கள். கேரளப் பதிவு எண்ணுள்ள அந்த வண்டியை (இங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம்தான் கேரள எல்லை) ஆபிரகாம் ஜோன் என்பவர் ஓட்டி வர, அவரருகே 'செரி' என்பவரும் அமர்ந்து வந்திருக்கிறார். இவர்களிடம் வனக்காவலர் பத்மநாபன் என்பவர், 'வண்டியில் என்ன? இந்த வண்டி எங்கிருந்து வருகிறது?' என்றெல்லாம் கேள்விகளை கேட்க, இருவருமே முன்னுக்குப் பின் முரணான பதில்களையே கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த வனக்காவலர் டிரைவரை கைப்பிடியாய் பிடித்தபடி, கார் டிக்கியை திறக்க, அங்கே மூன்று பாலிதீன் சாக்குப் பைகளில் 100 கிலோவுக்கும் அதிகமான மான் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் பதினாறு துப்பாக்கி தோட்டாக்களும், கறிவெட்டின இரண்டு கத்திகள், 12 வோல்ட் பாட்டரி செல்கள் மூன்றும், ஹெட் டபுள் டார்ச் லைட் ஒன்றும் இருந்திருக்கின்றன.

இதையெல்லாம் பார்த்த வனக்காவலர் டிரைவரை அப்படியே 'கிடுக்கி' போட்டுக் கொள்ள, இந்த சந்தடியில் 'செரி' ஓட்டம் பிடித்திருக்கிறார். இறுதியில் டிரைவரிடம் மட்டுமே விசாரணை நடந்துள்ளது.

டிரைவர், ''நான் கேரளா வழிக்கடவு ரேஷன் கடையில் வேலை செய்கிறேன். தேவாலா-காட்டி மட்டத்திற்கு சொந்தக்காரர் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். ஊருக்கு திரும்பும்போது அங்கே சிவப்பு குவாலிஷ் வண்டியில் மஜீது, கேசி, ஷாஜி உள்பட நான்கு பேர் இருந்தனர். அந்த வண்டியில் இருந்த அந்த கறிய என் வண்டிக்கு ஏற்றி 'வழிக்கடவு போனதும் எங்களுக்கு வேண்டியவங்க சில பேர் வருவாங்க. அவங்ககிட்ட இதை கொடுத்துடு!'ன்னு சொல்லி, 'கூலியா ரெண்டு கிலோ கறியும், பணமும் கொடுப்பாங்க. வாங்கிக்க'ன்னும் சொல்லி விட்டாங்க. இதைத் தவிர வேறொண்ணும் எனக்குத் தெரியாது!'' என்றே மாறாமல் சொல்லியிருக்கிறார்.

டிரைவர் சொன்ன தகவலை வைத்து காட்டி மட்டம் சென்றனர் வனத்துறையினர். அங்கே மஜீதைப் பற்றி விசாரிக்க, நினைத்தே பார்க்க முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன.

''மஜீதுவின் பூர்வீகம் கேரளா. தமிழகத்தின் அடர்ந்த வனப்பகுதியான கூடலூருக்குள் நீண்டகாலம் முன்பே வந்த பல ஏக்கர் காடுகளை வளைத்துப் போட்டுள்ளார். இது தவிர அவருக்கு சொந்தமான எஸ்டேட்டும் இங்கே உள்ளது. அந்த எஸ்டேட்டில்தான் சம்பவத்தன்று காட்டாடு போல் வளர்ந்த புள்ளி மான் ஒன்றையும், மாடுபோல் வளர்ந்திருந்த கட மான் ஒன்றையும் கொன்று கறியாக்கியிருக்கின்றனர். அதில் ஒரு பகுதியை எஸ்டேட்டிலேயே வைத்து விருந்து போட்டுவிட்டனர். மீதியை இவர்களிடம் கொடுத்து விட்டனர்!'' என்ற விவரம் அங்கிருந்த சமையல்காரர் மூலம் தெரிய வந்துள்ளது.

வனத்துறையினர் அந்த எஸ்டேட்டை அலசி அந்த சமையல்காரரை மான்கறி குழம்புடன் கைது செய்து வந்துவிட்டனர். தொடர்ந்து மஜீது, ஷாஜி, கேசி ஆகியோர் கேரளாவிற்கு தப்பியோடி விட்டதாகவும், அவர்களைத் தீவிரமாக தேடி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் மஜீதும் அவன் கூட்டாளிகளும் வேறு எங்கும் செல்லவில்லை. அதே வனப்பகுதியில், அங்குள்ள வேறொரு எஸ்டேட்டிலேயேதான் ஜாலியாக தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் சில வனத்துறை அதிகாரிகள் பேரம் பேசுவதாகவும் வன ஊழியர்கள் மத்தியிலேயே பேச்சு இருந்தது.

''மான்கறி விவகாரம் என்பதால் நிச்சயம் ரூபாய் பத்து லட்சம் முதல் ரூபாய் இருபது லட்சம் வரை அபராதம் போட வாய்ப்புள்ளது. தண்டனையும் மிகக் கடுமையாக இருக்கும். மிகப்பெரிய பாலிவுட் நடிகரான சல்மான்கானே அதில் மாட்டி படாதபாடுபடுகிறார். எனவே உங்களை வழக்கிலிருந்து கழற்றி விட வேண்டுமானால் குறைந்தது நான்கு லட்சம் ரூபாயாவது தாருங்கள்!'' என ஓர் அதிகாரியே கேட்பதாகச் சொன்னார்கள்.

இதுவே இயற்கை ஆர்வலர்களிடமும் செய்தியாகப் பரவியது. ''மஜீது தரப்பு ரூபாய் இரண்டு லட்சம் வரை தரத் தயாராகி விட்டார்கள். இந்த பேரம் வனத்துறை அலுவலகத்திலேயே நடந்தது. இதை சி.எம். செல் வரை புகாராக அனுப்பியுள்ளோம்!'' என்று குமுறினர் அவர்கள்.

அவர்கள் தொடர்ந்து பேசும்போது, ''இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கே பொறுப்பில் இருந்த வன அதிகாரி ரொம்ப நேர்மையானவர். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதிரடியாகவே இருக்கும். அந்த வகையில்தான் மான்கறி போட்டு ஒரு பாதிரியார் மாட்டிக் கொண்டார். அவரைக் கைது செய்ததோடு, உடனடியாக நான்கரை லட்ச ரூபாய் அபாரதமும் போட்டார். ஆனால் இப்போதுள்ள அதிகாரியோ அதுக்கு நேர் எதிர். ஆறு மாதம் முன்பு கூடலூர் புளியம்பாறையிலிருந்து நூறு கிலோ மான்கறி கடத்தி வந்த ஜீப்பை மரப்பாலம் அருகே பிடித்தார். அதில் வண்டியைப் பறிமுதல் செய்தார். வழக்கும் பதிவுசெய்து இரண்டு பேரை மட்டும் சிறையில் அடைத்தார். அபராதம் ஏதும் போடவில்லை. அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிறகு என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. இப்போதும் அப்படித்தான். இருவரைக் கைது செய்திருக்கிறார். கறி கடத்தி வந்த மாருதியை பறிமுதல் செய்தவர் இன்னமும் மஜீது பயன்படுத்திய குவாலிஷ் வண்டியைப் பிடிக்கவேயில்லை. அதனால் இந்த விஷயத்தில் எங்களுக்கு சந்தேகம் வலுப்பெறுகிறது!'' என்றனர்.

குறிப்பிட்ட வனத்துறை அதிகாரியிடம் பேசியபோது, ''இங்கே யாரும், எதற்கும் பேரம் நடத்தவில்லை. கடத்தல்காரர்கள் கேரளாவிற்கு தப்பியோடி விட்டார்கள். வாரண்ட் போட்டு, அவர்களை பிடிக்க கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளோம்!'' என்றார். ஆனால் கடைசி வரை சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேயில்லை.

இந்தப் பக்ரீத் பண்டிகையின்போது நடந்த மான்வேட்டையின்போது துப்பாக்கி தோட்டாக்களும், வெடிமருந்துகளும், மிகுதியாக ஒளி உமிழும் டார்ச் லைட்டுகளும்தான் கிடைத்தன. அதை வைத்து அதன் மூலம்தான் மான்வேட்டைகள் நடக்கின்றன என நம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். அதைத் தாண்டி வேறு வகையிலும் மான்கள் கொல்லப்படுகின்றன என்பதை உணர வைத்தது கூடலூரில் சுற்றித்திரிந்த கட மான் ஒன்று. அது சாதாரணமாக திரியவில்லை. அதன் கீழ்தாடை வெடித்து சிதறி தொங்கிய நிலையில் எதையும் சாப்பிட முடியாமல் காடுகளில் அலைந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த மனிதாபிமானம் மிக்கவர்கள் 'இப்படியும் நடக்குமா?' என்று உச்சுகொட்டிக் கொண்டிருந்தனர்.

உயிரைக்குடிக்கும் அவுட்டுக்காய் வெடிகள் குறித்து ஏற்கெனவே பார்த்துள்ளோம். அதில் விவசாயிகள் காட்டுப்பன்றிக்காக காய்களில் வைக்கும் அவுட்டுக்காய் வெடிகள் எனப்படும் காய்வெடிகள் எப்படியெல்லாம் மற்ற விலங்குகளையும் இம்சிக்கிறது. அது இருப்பது தெரியாமல் பயிர்களையோ, கிழங்குகளையோ உண்ணும்போது, அது வெடித்து தாடை, வாய் கிழிந்து அந்த மிருகங்கள் சாப்பிட முடியாமல் நாள்கணக்கில் அலைந்து திரிந்து காடுகளில் சாவதை விரிவாகவே அதில் விளக்கியிருந்தோம். அதில் பெரிய விலங்கான யானைகளும் எப்படிப் பாதிக்கப்பட்டு இறக்கின்றன என்பதும் 7 வயது குட்டியானை வாய்கிழிந்து திரிந்து இறந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி சொல்லப்பட்டிருந்தது.

அதற்கெல்லாம் ஆதி முன்னோடியாகவே கூடலூர் காடுகளில்தான் அந்த அவுட்டுக்காய் வெடிகள் விலங்குகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஆதி முதலில் அடையாளம் காணப்பட்டதுதான் தாடை கிழிந்த அந்த கடமான்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x