Published : 14 Nov 2017 10:23 AM
Last Updated : 14 Nov 2017 10:23 AM

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்

கி

ராமங்களை இந்தியாவின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், நகரமயமாக்கல், சாலை விரி வாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய கிராமங்கள் தங்களது இயல்பை தொலைத்து வருகின்றன. அதேசமயம், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தங்க ளுக்கே உரித்தான அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் கிராமங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான கிராமம் தான் தேத்தாம்பட்டி.

பாரம்பரியத்தைப் போற்றுகிறார்கள்

மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது தேத்தாம்பட்டி. இந்த கிராமத்து மக்கள் பல தலைமுறைகளாக கலை, கலாச்சாரம், விவசாயம், உணவு, விளையாட்டுக்கள் என அத்தனையிலும் பாரம்பரியத்தைப் போற்றுகிறார்கள். அழகர் மலைக்கு நடுவில் அமைந்துள்ள தேத்தாம்பட்டியின் அத்தனை குடிகளும் விவசாயக் குடிகள் என்பது இன்னுமொரு சிறப்பு. இவர்கள் அனைவருக்குமே சொந்த நிலம் இருக்கிறது. என்றாலும் அவ்வப்போது ஊர்க் கணக்கிலும் பொதுச் சொத்துக்களை வாங்குகிறார்கள். கூடுதலாக விவசாயம் செய்ய நினைப்பவர்கள் இவற்றைக் குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்கள்.

தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதால் இங்கே தட்டாமல் தழைக்கிறது விவசாயம். உள்ளூரிலேயே விவசாயம் செய்து பிழைக்க வழிகள் இருப்பதால் தேத்தாம்பட்டிக்காரர்கள் பெரும்பாலும் வெளியூர் வேலைக்குப் போவதை தவிர்க்கிறார்கள். வறட்சியே எட்டிப் பார்க்காத இக்கிராமத்தில், காய் கனிகளை பாரம்பரிய முறையில் விளைவிக்கிறார்கள்.

கிராமிய விழா

சாதிகள் பல இருந்தாலும் அதைச் சொல்லி யாரும் இங்கே சண்டை போட்டுக் கொண்டதாக இதுவரை தகவல் இல்லை. தனி நபர்களுக்குள் ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கினால் அதை அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இத்தனை சிறப்புகளுடன் வாழும் தேத்தாம்பட்டியில் மதுரையைச் சேர்ந்த ‘செசி’ தொண்டு நிறுவனம் அண்மையில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடியது. இதை ஒரு கிராமிய விழாவாகவே கொண்டாடிய செசி, மத்திய பிரதேச முன்னாள் முதன்மை செயலர் சரத் பேகர், அம்மாநில கூடுதல் டி.ஜி.பி அனுராதா சங்கர், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்அதிகாரி கீதா, ஏக்தா பரிஷத் அமைப்பின் தேசியத் தலைவர் பி.வி.ராஜகோபால், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஓவிய ஆசிரியர் பார்பரா உள்ளிட்டோரையும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் தேத்தாம்பட்டிக்கு அழைத்து வந்திருந்தது.

அந்த மக்களின் இயற்கை சார்ந்த பாரம்பரியமான வாழ்க்கை முறையை நேரில் பார்த்து பிரம்மித்துப் போனது இந்தக் குழு. கிராமங்களின் அருமை பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், தேத்தாம்பட்டியைப் போன்ற பழமை மாறா பசுமை கிராமங்களை உருவாக்கவும், கிராமக் கலாச்சாரம், கலைகள் மற்றும் விவசாயத் தைப் பாதுகாக்கவும் இந்தக் கிராமியத் திருவிழாவை கொண்டாடியதாகச் சொல்கிறார் ‘ஏக்தா பரிஷத்’தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தன்ராஜ்.

சிறந்த அறிவாக கருதுகிறார்கள்

இதுதொடர்பாக இன்னும் விரிவாகப் பேசிய அவர், “கிராமங்களும் கிராம மக்களின் கலாச்சாரம் மற்றும் கலை விழாக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. 7 லட்சம் கிராமங்கள் இருந்த இந்தியாவில் இப்போது 6 லட்சம் கிராமங்கள் தான் இருக்கின்றன. ஏழ்மைக்கும் வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது. ஏழ்மையை விரட்டுவதுதன் மூலம் வன் முறையை ஒழிக்கலாம். இதைத்தான் நாங்கள் தேத்தாம்பட்டியில் பார்த்தோம்.

அங்குள்ள மக்கள் அவரவர் நிலத்தில் பாடுபடுகிறார்கள். பொன்னைவிட மேலாக நிலத்தை மதிக்கிறார்கள். ஊர்ப்பொது நிலத்தின் குத்தகை வருமானத்தைக் கொண்டு ஊருக்குள் மரங்களை வளர்க்கிறார்கள். எஞ்சிய நிதியை ஊர்ப்பொதுக் காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். தாத்தாவிடமும் அப்பாவிடமும் சிலம்பம் கற்று அவர்களுக்கே சவால் விடும் தாவணிப் பெண்கள் இங்கே தெருவுக்கு தெரு இருக்கிறார்கள்.

பாடப் புத்தகத்தைப் படித்து மதிப்பெண் எடுப்பதை நாம் பெரிதாக நினைக்கிறோம். ஆனால் இந்த மக்கள், பாரம்பரிய கலைகளையும், விவசாயத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதையே சிறந்த அறிவாகக் கருதுகிறார்கள். அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்தும், ஆட்களைப் பார்த்தும் இவர்கள் இயல்பாகப் பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடலுக்கான எளிய இசைக் கருவிகளை இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இளம்பெண்கள் கும்மியடிக்கிறார்கள்; இளைஞர்கள் விளையாட்டுக்களில் வீரம் காட்டு கிறார்கள்.

நிலம் தான் படியளக்கும் தெய்வம்

குடிமக்களின் நிம்மதியான, மகிழ்வான வாழ்வே ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பார்கள். அப்படியான மகிழ்ச்சியை தேத்தாம்பட்டி கிராமத்தில் பார்த்தோம். இந்த மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், அமைதியையும் மற்ற கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக இனிவரும் காலங்களில் இந்த கிராம திருவிழாக்களை கொண்டாட இருக்கிறோம்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஊர் பெரியவர் கரடி,‘‘எங்க கிராமம் ரொம்பப் பெருசு. 1,500 குடும்பம் இருக்கு; 500 குழந்தைகள் இருக்கு. நிலம்தான் எங்களுக்கு படி அளக்குற தெய்வம். அதனால, யாருக்கும் ஒரு அடி நிலத்தைக்கூட விற்பதில்லை என்பதை நாங்க கொள்கையாவே வெச்சிருக்கோம். எங்க கிராமத்துல தனிக் குடித்தனங்கள் அவ்வளவா கிடையாது. பேரன் - பேத்திகள், பெரியவங்கன்னு பெரும்பாலும் எல்லாமே கூட்டுக் குடும்பங்கள் தான். அதனால எல்லா வீடுமே எப்போதும் கலகலப்பா இருக்கும்” என்றார்.

தேத்தாம்பட்டிகள் எப்போதும் இதே கலகலப்புடன் இருக்கட்டும்!

படங்கள்:

எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x