Published : 25 Apr 2023 05:06 PM
Last Updated : 25 Apr 2023 05:06 PM

ஓடிடி திரை அலசல் | Jubilee - சினிமா ஆர்வலர்களுக்குத் தீனிபோடும் நிழல்களின் நிஜங்கள்!

பார்வையாளர்களை பரவசப்படுத்தி அவர்களது கனவுகளில் வண்ணங்களைப் பூசி பறக்கும் சினிமா எனும் அந்த மாய பட்டாம்பூச்சியின் சிறகுகள் இரும்பை விட கனத்துக் கிடப்பவை. முகப்பூச்சும், உதட்டுச் சாயமும் தடவி திரை தோறும் விரியும் நட்சத்திரங்கள் பலரும், அத்துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள செத்துப் பிழைத்தலுக்கு நிகரான துயரங்களைக் கடந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. தங்களது முதல் வாய்ப்புக்காக இழக்க வேண்டியவை ஏராளம் எனத் தெரிந்திருந்தபோதும். அந்தக் கனவுத் தொழிற்சாலையின் வாசல் திறப்புக்காக இந்த நிமிடம் வரை காத்துக்கிடப்போர் ஏராளம்.

நாடகக் கலையின் நவீன வடிவமான சினிமா அதன் தொடக்க காலத்தில் இருந்தே மக்களுக்கு ஆச்சரியங்களையும் கனவுகளையும் விதைத்துக் கொண்டே வந்திருக்கிறது. அதனால்தான் தங்களுக்குப் பிடித்த நாயகர்கள் திரையில் தோன்றும்போது ரசிகர்களின் மனதில் தீ பிடிக்கிறது.அறிவியலுக்கு அப்பாற்பட்ட காரியங்களை அவர்கள் செய்யும்போதுகூட கைத்தட்டி கொண்டாட வைக்கிறது. திறமையும், வாய்ப்பும் முக்கியமானதாக கணிக்கப்படும் இத்தொழிலில் கரை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டமும் அமைய வேண்டியது அவசியமாகிறது. திரைக்குப் பின்னால் நடக்கும் துரோகம், வஞ்சம், பழிவாங்கல், காதல், அவமானம், சூழ்ச்சி, சதியென தங்களுக்கான இடத்தைப் பிடிக்கவும் தக்கவைத்துக் கொள்ள திரைப் பிரபலங்கள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

இந்தப் பின்னணியில், பாலிவுட் சினிமாவின் பொற்கால நினைவுக் குவியல்களின் மீட்டுருவாக்கம் செய்து வெளிவந்துள்ளது 'ஜூப்ளி' இந்தி வெப் சீரிஸ். 1940-களின் பிற்பகுதியில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலக்கட்டத்தில்வெள்ளித்திரை ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. பாலிவுட் சினிமா இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் தேடலை தீவிரப்படுத்துகிறது. இத்தேடலின் பின்னணியில் எதிர்பாராத சம்பவங்கள், நிகழ்வுகளின் தொகுப்பே 'ஜூப்ளி' வெப் சீரிஸின் ஒன்லைன்.

இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே, எழுத்தாளர் அதுல் சபர்வால், சவுமிக் சென்னுடன் இணைந்து எழுதி இயக்கியிருக்கிறார். இந்தக் கூட்டணியின் தேர்ந்த எழுத்து, வெப் சீரிஸில் வரும் கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களின் வழியே நன்கு வெளிப்படுத்தப்படுகிறது.கதாப்பாத்திரங்கள் இடையே நிலவும் குழப்பத்தையும், இயலாமையையும், பலத்தையும் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் சீரிஸின் திரைக்கதை முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இந்த நேர்த்தியான பணிதான், இந்தி சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள் அனைவரிடத்திலும் இந்த வெப் சீரிஸ் ஒரு பிணக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்திய சுதந்திரத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அதாவது 13 ஜூலை 1947-ல் இந்த வெப் சீரிஸ் தொடங்குகிறது. ராய் டாக்கீஸின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் ராய் (புரொசென்ஜித் சட்டர்ஜி). இவர் அறிமுகப்படுத்திய பலரும் உச்ச நட்சத்திரங்கள். ராய் டாக்கீஸின் புதிய சூப்பர் ஸ்டாரான மதன் குமாரை தேடத் தொடங்கும் அவர், மதன் குமாரை கண்டுபிடித்திடவும் செய்கிறார். ஸ்ரீகாந்த் ராயின் மனைவியும், ராய் டாக்கீஸின் பங்குதாரருமானவர் பிரபல நடிகை சுமித்ரா குமாரி (அதிதி ராவ்). சுமித்ரா குமாரிக்கு மதன் குமாராகும் வாய்ப்புத் தேடி வந்து அதில் வெற்றியும் பெற்ற ஜம்ஷேத் கானுக்கும் (நந்தீஷ் ஷாந்து) இடையே மலரும் கட்டுப்பாடுகளற்ற காதல், அக்காதலுக்காக எதையும் தியாகம் செய்ய இருவரும் துணிகின்றனர்.

இந்த சமயத்தில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீபோல பரவுகிறது. கராச்சியை பூர்விகமாகக் கொண்ட ஜம்ஷேத் கானுடன் கல்கத்தாவைப் பூர்விகமாக கொண்ட சுமித்ரா குமாரிக்கும் இடையிலான காதல் பாகிஸ்தானுக்கு சென்று வாழ முடிவெடுக்கச் செய்கிறது. இந்தச் சூழலில் ராய் டாக்கீஸின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் ராய்க்கு இந்த விஷயம் தெரியவர, தனது கண்டுபிடிப்பான மதன்குமாரையும், மனைவியையும் அழைத்துவர தனது நேர்மையான பணியாளரான பினோத் தாஸை (அபர்சக்தி குரானா) கல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கிறார் ஸ்ரீகாந்த் ராய்.

பினோத் தாஸ் அவர்களை எங்கு சந்தித்தார்? என்ன பேசினார்? அவர்களை அழைத்து வந்தாரா? ராய் டாக்கீஸின் மதன் குமார் அறிவிப்பு என்னாகிறது? சுமித்ரா குமாரியும் ஜம்ஷேத் கானும் பாகிஸ்தான் சென்றார்களா? பினோத் தாஸ் சந்திக்கும் ஜெய் கண்ணா (சிதாந்த் குப்தா) யார்? ஜெய் கண்ணா சந்திக்கும் நிலோஃபர் (வமிகா காபி ) யார் என்பதுதான் 'ஜூப்ளி' வெப் சீரிஸின் திரைக்கதை. இந்த வெப் சீரிஸின் வெற்றிக்கு, இதில் பணியாற்றியுள்ள அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையே சாரும். காரணம், ஒரு பீரியட் வகை சீரிஸுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை ஆய்ந்தறிந்து அழகு சேர்த்திருக்கின்றனர் தொழில்நுட்பக் கலைஞர்கள். ஆர்ட் டைரக்சனில் தொடங்கி உடைகள், எடிட்டிங் என அனைத்துமே பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக இந்த வெப் சீரிஸின் வெற்றிக்கு ஒளிப்பதிவும், இசையும் பக்கப்பலமாக பயணித்திருக்கிறது. சீரிஸ் முழுவதும் வரும் செபியா (Sephia) டோன் மோட், வெப் சீரிஸ் முடிந்தபிறகும் பார்வையாளர்களின் கண்களைவிட்டு அகல மறுக்கும் வகையில் ஒவ்வொரு பிஃரேமையும் செதுக்கியிருக்கிறது பிரதிக் ஷாவின் கேமரா.

பிரிவ்யூ தியேட்டர், புரொஜெக்டர் ரூம், கல்கத்தா, பம்பாய், ட்ராம் வண்டிகள், சினிமா ஸ்டூடியோ, சினிமா செட், அகதிகள் முகாம், கோர்ட், நட்சத்திர விடுதிகள், விருந்துகள் என பிரதிக் ஷாவின் கேமராவும் லைட்டிங்கும் சீரிஸ் முழுக்க ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. அதேபோல், இந்த சீரிஸில் பாடல்களை அமித் திரிவேதியும், பின்னணி இசையை அலோகானந்த தாஸ்குப்தாவும் அமைத்துள்ளனர். கிட்டத்தட்ட 12 பாடல்கள் அனைத்துமே கிளாசிக்கல் ஹிட் ரகம். அதேபோல் பின்னணி இசையும் பல நேரங்களில் பார்வையாளர்களுக்கும் அவர்களது உணர்வுகளுக்கும் இடையே மெல்லிய உரையாடலை நிகழ்த்தியிருக்கிறது.

இந்த சீரிஸின் வெற்றியில் கதாப்பாத்திரங்களின் தேர்வுக்கு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. பினோத் தாஸாக வரும் அபர்சக்தி குரானாதான் இந்த சீரிஸ் முழுவதும் வரும் பிற கதாப்பாத்திரங்களுடன் பயணிக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் தனது அசைக்கமுடியாத நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வாய்ப்புக்காக காத்திருக்கும்போதும், அதை வெளிப்படுத்தும்போது, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் காட்சிகள் என சீரிஸ் முழுக்க அவரது நடிப்பை பற்றி பேசுவதற்கான ஸ்கோப்பை ஏற்படுத்தியிருக்கிறார். புரொசென்ஜித் சட்டர்ஜி, அதிதி ராவ், நந்தீஷ் ஷாந்து உள்பட இந்த வெப் சீரிஸில் வரும் பல நடிகர்களின் நடிப்பு சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக சிதாந்த் குப்தாவும், வமிகா காபியும்தான் சீரிஸின் அடுத்தடுத்த திருப்பங்களுக்கு முக்கியமானவர்கள். எனவே, இந்த இருவரும் ஸ்கிரீன் ஸ்பேஸை பகிர்ந்துகொள்ளும் இடங்களை அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதிலும் வமிகா காபி, இந்த சீரிஸ் மூலம்தான் இவர் அறிமுகமாகிறார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த சீரிஸில் நடித்துள்ள மற்றவர்களுக்கு ஆடியன்ஸ்களின் அப்ளாஸ் கிடைத்தாலும், ஹார்டின்கள் கிடைத்திருப்பது வமிகா காபிக்குத்தான். இந்த வெப் சீரிஸில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த காட்சிகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், வமிகா காபியை வைத்து பல பார்வையாளர்களை மீண்டும் அடிமையாக்கியிருக்கிறார்.

இந்த வெப் சீரிஸின் முதல் சீசன், 10 எபிசோடுகளைக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் உள்ளது. வயது வந்தேருக்கான சான்றிதழ் பெற்ற இந்த சீரிஸின் ஆபாச வார்த்தைகள் நிறைய இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்திய சுதந்திரம், பாகிஸ்தான் பிரிவினை, அந்த நேரத்தில் கலவரங்கள் என்பது உள்ளிட்ட சென்சிட்டிவான விஷயங்களுக்குள் செல்லாமல், தான் சொல்ல வந்ததை சுவாரஸ்யம் குறையாமல், எந்த மொழியில் பார்ப்பவர்களும் பயோஸ்கோப் சினிமாவின் கருப்பு வெள்ளைக் காலத்து நினைவுகளை ரசிக்கும்படி வெளிவந்திருக்கிறது ‘ஜூப்ளி’ வெப் சீரிஸ். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெளியான இந்த வெப் சீரிஸ், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x