Published : 22 Feb 2019 12:21 PM
Last Updated : 22 Feb 2019 12:21 PM

தென்னிந்திய பளுதூக்கும் போட்டி: வாகை சூடிய தமிழக அணிகள்!

தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில்  ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு இரண்டிலுமே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர் தமிழக அணியின் வீரர், வீராங்கனைகள்.

தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்கம், கோவை மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம், கோவை நேரு கல்விக்  குழுமங்கள் சார்பில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி,  கோவை திருமலையம்பாளையத்தில் உள்ள நேரு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள்  நடைபெற்றது. இளைஞர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில், ஆண்கள், மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டி தொடக்க விழாவில், தமிழ்நாடு பளுதூக்கும் சங்கத் துணைத் தலைவர் அ.முரளிதரன், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பி.கிருஷ்ணகுமார், மாவட்ட பளுதூக்கும் சங்கத் தலைவர் ஜி.கே.செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா,  புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

ஆண்களுக்கான போட்டியில், 55 கிலோ எடைப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த பி.ரமேஷ்,  61 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.அரவிந்தன், 67 கிலோ எடைப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த கோட்டிஸ்வரராவ்,  73 கிலோ எடைப்  பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த டி.எச்.வி.நாயுடு,  81 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார்,  89 கிலோ எடைப் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.ஹரிஹரன்,  96 கிலோ எடைப் பிரிவில் தெலங்கானாவைச் சேர்ந்த பூர்ணசந்திரராவ்,  102 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த

அனிஷ்குமார், 109 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அபிராம், 109 கிலோவுக்கும் கூடுதலான எடைப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த சிவகிஷோர் ஆகியோர் முதலிடம் வென்றனர்.  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக ஆண்கள் அணியினர் வென்றனர்.

பெண்களுக்கான போட்டியில்,  45 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நித்யா, 49 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெசிந்தா ஜாக்குலின்,  55 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழரசி, 59 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிருந்தா, 64 கிலோ எடைப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த ஜி.அஸ்வினி, 71 கிலோ எடைப் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த கோமளா, 76 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த திவ்யா, 81 கிலோ எடைப் பிரிவில் தெலங்கானவைச் சேர்ந்த சுகன்யா,  87 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பெண்கள் பிரிவிலும் ஒட்டுமொத்த  சாம்பியன் பட்டத்தை தமிழக  அணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x