

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவின் எண்ணெய், எரிவாயு இறக்குமதியை இந்தப் போர் நேரடியாகப் பாதித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி), திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) தட்டுப்பாடு கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களையும் வணிகச் செயல்பாடுகளையும் பாதித்துள்ளது. இதையடுத்து, ஈரான் அரசுடன் இந்தியா தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் பலனாக இந்திய தேசியக் கொடியுடன் ‘சிவாலிக்’, ‘நந்தா தேவி’ ஆகிய இரண்டு கப்பல்கள் 92,712 மெட்ரிக் டன் எல்பிஜி-யை ஏற்றிக்கொண்டு ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளன. இன்னும் பல இந்தியக் கப்பல்கள் அந்த நீரிணையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆதார நீர்ப்பாதை
ஈரான் கடற்கரையையும் ஓமன் நாட்டையும் பிரிக்கும் குறுகிய கடல் பாதை ஹார்முஸ் நீரிணை. இது 167 கி.மீ. நீளம், 97 கி.மீ. வரை அகலம் கொண்ட நீர்ப்பாதை. இதன் வழியாக நாள்தோறும் 2 கோடிக்கும் அதிகமான கச்சா எண்ணெய் பேரல்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20% இதன் வழியாக நடைபெறுகிறது. எல்பிஜி மட்டுமல்லாமல் எல்என்ஜி வர்த்தகம்கூடப் பெருமளவு இதே வழியாகத்தான் நடைபெறுகிறது.
3,000 எண்ணெய் டேங்கர் லாரிகளைச் சுமந்து செல்லும் சரக்குக் கப்பல்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டாலும் அதன் தாக்கம் உலக நிதிச் சந்தைகள் தொடங்கிப் பல நாடுகளின் இல்லங்கள் வரை எதிரொலிக்கும். போர் காரணமாக, இந்த நீரிணையைச் சுற்றிப் பதற்றமான சூழல் ஏற்பட்டிருப்பதால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
33 கோடி வாடிக்கையாளர்
இந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முதன்மையான எரிபொருள் எல்பிஜி. ஆண்டுக்கு 3.13 கோடி டன் எல்பிஜி சிலிண்டர்கள் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் 33 கோடி வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். அப்படியானால், 80% எல்பிஜி சிலிண்டர்கள் வீடுகளில் சமையலுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
அதோடு, நாடு முழுவதும் 70.75 லட்சம் வீடுகளுக்குக் குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்பிஜியில் 60-65% செளதி அரேபியா, கத்தார் முதலான வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
அதிலும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியில் 80-90% வரை ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் கொண்டுவரப்படுகிறது. மீதமுள்ள 40% எல்பிஜி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இயற்கை எரிவாயு
அடுத்து, திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) என்பது மைனஸ் 162 டிகிரி செல்சியஸுக்குக் குளிரூட்டப்பட்டு, திரவமாக்கப்பட்ட மீத்தேன் வாயு. உரங்கள் உற்பத்திக்குத் தேவையான அமோனியாவைத் தயாரிக்க இதுவே முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.
இதுதவிர, தொழிற்சாலைகள், வாகனங்களுக்குத் தூய்மையான எரிசக்தியை வழங்கும் நகர எரிவாயு விநியோகம் (சிஜிடி), மின் உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ் முதலானவற்றுக்கு எல்என்ஜி முக்கிய எரிசக்தி ஆதாரமாகும்.
மீத்தேனின் மற்றொரு வடிவம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி). காற்று மாசைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்துகள், ஆட்டோக்களுக்கு இது உகந்த எரிவாயுவாகக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவுக்குத் தேவையான எல்என்ஜியில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதியில் பாதி அளவு கத்தாரிலிருந்து நீண்டகால ஒப்பந்தங்களின் மூலம் கொண்டுவரப்படுகிறது.
உலகளவில் 20% எல்என்ஜியை கத்தார் விநியோகிப்பதால், அங்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிலும் ஐரோப்பிய நாடுகளைப் போல் இந்தியாவிடம் நிலத்தடி எரிவாயு சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால், இறக்குமதி செய்தவுடன் உடனடியாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது.
அந்த வகையில் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட எல்என்ஜி துறைமுகங்களுக்கு வந்தவுடன், அவை கிரையோஜெனிக் காப்பிடப்பட்ட தொட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. மீண்டும் வாயுவாக மாற்றப்பட்டு, குழாய் இணைப்புகள் மூலம் உரிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
உள்நாட்டு உற்பத்தி!
தற்போது நிலவும் எல்பிஜி தட்டுப்பாடு அளவுக்கு எல்என்ஜி பற்றாக்குறை பொதுவெளியில் பெரிய அளவில் பேசுபொருள் ஆகவில்லை. உண்மையில், எல்என்ஜியின் போதாமை இந்தியத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில், போக்குவரத்துத் துறையின் செயல்பாட்டில், மின்உற்பத்தியில் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் எனப் பொருளியல் ஆய்வறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனெனில், 2030லிருந்து இந்தியாவின் எல்என்ஜி தேவை 60% அதிகரிக்க இருக்கிறது. அதற்கு ஏற்ப உள்நாட்டு உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை இந்தச் சிக்கல் உணர்த்தியிருக்கிறது.
பொருளாதாரரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு மானிய விலையில் எல்பிஜி இணைப்புகளை வழங்கிய பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்களின் மூலம், எல்பிஜி பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் நாடெங்கிலும் பரவலாகி இருக்கிறது.
இத்தகைய சூழலில் எல்பிஜி, எல்என்ஜி தேவைகளுக்காக இறக்குமதியை இந்தியா அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் இருந்து விடுபட உரிய வழிகளைக் கண்டடைய வேண்டும்.
முதற்கட்டமாக, எரிவாயுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உள்நாட்டுச் சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியை 28% வரை அதிகரிக்கும் வேலை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
அதேபோன்று எல்பிஜி சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைத் தவிர்க்க, ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் பதிவு செய்யக் குறைந்தபட்சம் 25 நாள் இடைவெளி வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, எல்பிஜிக்காக ஓரிரு நாடுகளை மட்டும் சார்ந்திருக்காமல் ரஷ்யா, நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்தல், மாற்று எரிபொருள்களை நோக்கி நகர்தல் ஆகியவற்றின் மூலமே எதிர்வரும் காலத்தில் இத்தகைய நெருக்கடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.