

கல்விக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்று பலரும் நம்பியிருந்த காலகட்டத்தில் வரலாற்று ஆய்வாளராகத் தடம்பதித்தவர் ரொமிலா தாப்பர்.
லக்னோவில் 1931இல் பிறந்த அவர், தன் தந்தையின் ராணுவப் பணி காரணமாகப் பல்வேறு நகரங்களில் படித்தார். வரலாற்றை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தார். 1958 இல் ‘இந்திய வரலாறு’ குறித்த ஆய்வுப் படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் வருகைதரு பேராசியராகவும் பணியாற்றியுள்ளார்.
பண்டைய வரலாற்றை இந்துத்துவமாகக் கட்டமைத்து அதுவே சமூக அறிவியலாக நிறுவப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பண்டைய இந்தியா குறித்த ஆய்வில் ரொமிலா ஈடுபட்டார். பாடப்புத்தகங்களில் சொல்லியிருப்பவற்றை அகழாய்வுகள் சொல்லும் தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உள்ளாக்குவதாகப் பண்டைய இந்தியா குறித்த இவரது சமூக, கலாச்சார வரலாற்று ஆய்வு அமைந்தது.
அசோகர், மௌரியர்கள் குறித்த இவரது ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தது. வரலாற்று ஆய்வில் எவ்விதச் சமரசத்துக்கும் சாய்வுக்கும் இடங்கொடுக்கக் கூடாது என்பது ரொமிலாவின் பார்வை.
சிலர் பழங்கால இந்தியாவைப் பொற்காலமாகச் சித்தரிக்க நினைத்து அந்நாளில் நிலவிய சாதியக் கட்டுமானங்களைப் பதிவுசெய்வதில்லை. ஆனால், அதுவும் சேர்ந்ததுதானே இந்தியா என்பது ரொமிலாவின் வாதம்.
பழங்காலத்தில் நிலவிய சாதியக் கட்டுமானங்களும் வர்க்கப் பிரிவினைகளும் எப்படி அதிகாரப் படிநிலையை உருவாக்கின என்பது உள்ளிட்ட வரலாறே முழுமையானதாக இருக்கும் என்று சொல்லும் ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வை அப்படித்தான் மேற்கொண்டார். இவரது ஆய்வு நூல்கள் பண்டைய இந்திய வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தின.
வரலாற்று ஆய்வாளர் என்பதற்காகச் சமகாலத்திலிருந்து ரொமிலா தாப்பர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. சமகால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். நாடு விடுதலை பெற்றபோது 15 வயது சிறுமியாகத் தான் கனவு கண்ட முற்போக்கு இந்தியா இன்னும் கைகூடவில்லை என்று தன் அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.
மதத்தின் பெயரால் அத்துமீறலும் வன்முறையும் நிகழ்த்தப்படும்போது, வரலாற்று ஆய்வின் அடிப்படையிலான உண்மையை எடுத்துச் சொல்லி, நாம் தற்போது பேசும் சித்தாந்தத்துக்கும் நம் வரலாற்றுக்கும் தொடர்பில்லை என்பதைக் கவனப்படுத்திவருகிறார்.
1992, 2005 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை ரொமிலா தாப்பர் மறுத்தார். “நான் தொடர்புடைய கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் தவிர அரசாங்கம் வழங்கும் எந்த விருதையும் நான் ஏற்பதற்கில்லை” என்று அதற்குக் காரணமும் சொன்னார். போலிப் பெருமிதங்களில் மூழ்கிவிடுவதிலிருந்து மக்களைக் காத்துவரும் வரலாற்று ஆய்வாளர்களில் ரொமிலா தாப்பர் தனித்துவமானவர்.