Published : 07 Sep 2022 06:31 AM
Last Updated : 07 Sep 2022 06:31 AM

சுதந்திரச் சுடர்கள் | மாநிலப் பிரிவினைக்கு வித்திட்ட மொழி உணர்வு

ஹரீஷ் கரே

ஹரீஷ் கரே

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்துக்கு ஏற்பக் கூட்டாட்சி அமைப்பு முறையில் மத்திய அரசே எதையும் திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும் என்ற வகையில் அரசமைப்பே பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யும் உரிமையையும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு அளித்திருப்பதன் மூலம், உயர்ந்த அதிகாரமுள்ளது எது மத்திய அரசா – மாநில அரசுகளா என்பதற்கான விடையைத் தந்திருக்கிறது அரசமைப்பு.

அரசமைப்பு ஏற்படுத்திய இந்த ஏற்பாடுகளுக்கும் மேலாக, அனைத்திந்திய அளவில் தனக்கு ஈடு இணையில்லாத மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக ஜவாஹர்லால் நேரு திகழ்ந்தார். மாநில அலகுகளை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதிய ஆளும் (காங்கிரஸ்) கட்சியின் தலைவராக நேரு கோலோச்சினார்.

இந்த அரசியல் உடைமைகளுக்குச் சிகரம் வைத்தாற்போல ‘மத்திய திட்டக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பொருளாதார – சமூக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகார வர்க்கத்துக்கெல்லாம் உயர் அதிகாரபீடமாகச் செயல்பட்டது ‘மத்திய திட்டக் குழு’.

புதிய தேசத்தை உருவாக்குவது என்பது புதிய லட்சியமாகிவிட்டது. நாட்டை நவீனப்படுத்த விரும்பிய அரசியல் தலைவர்கள் அதை மக்களுடைய மனங்களில் உருவேற்றியதால், வலுவான மத்திய அரசு தேவை என்ற கருத்துக்கு அது கவசமானது. பாசன வசதிக்காக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கங்களையும் தொழில் வளர்ச்சிக்காக அரசுத் துறையில் கட்டிய பெரிய தொழிற்சாலைகளையும் ‘புதிய இந்தியாவின் கோயில்கள்’ என்று வர்ணித்தார் நேரு.

புதிய, வளமான, சமத்துவ சமுதாயம் ஏற்பட ஐந்தாண்டு திட்டங்கள், புதிய அடிப்படை செயல்திட்டங்களாக ஏற்கப்பட்டன. நேருவும் ஐந்தாண்டு திட்டங்களுக்கான மாதிரிகளை உருவாக்கிய பி.சி. மஹாலனோபிஸும் புதிய குருமார்களாகப் போற்றப்பட்டனர். இது ஏற்படுத்திய உற்சாகமும், ஆர்வமும் எல்லோரையும் மயக்கத்தில் தள்ளிவிட்டது. அதில், ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களுமே மத்திய அரசின் ஆணையைத்தான் கேட்டு நடக்க வேண்டும் என்பதைச் சற்றே மறந்துவிட்டனர்.

மாநிலங்களின் லட்சியம்

‘வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற ஜனநாயக உரிமை காரணமாக மக்களை ஜனநாயகரீதியாகத் திரட்ட வேண்டியிருந்தது. இதனால் மாநிலங்களைச் சேர்ந்த படித்த - மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க தலைவர்கள் அதிகார பீடத்தில் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று பிரதேச, மொழி அடிப்படையில் வலியுறுத்தத் தொடங்கினர்.

‘மத்திய அரசுக்கு எல்லாம் தெரியும்’ என்ற அரசியல் கலாச்சாரத்தைக் கேள்வி கேட்ட அவர்களுடைய உரிமைக் குரல்கள், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க காங்கிரஸ் கட்சி கையாண்ட தீர்வு காணும் முறைமைக்கு பெரிய சோதனையாக அமைந்தன.

தங்களுக்குத் துளியும் விருப்பமோ, மனச் சமாதானமோ ஏற்படாவிட்டாலும் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்ற ஆந்திரர்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இது மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கும் பெரிய ஆவலைத் தூண்டிவிட்டது.

தங்களுடைய மொழி அடிப்படையில் மாநிலத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அத்துடன் நிற்காமல், எந்த விவகாரமாக இருந்தாலும் அதற்கு என்ன தீர்வு என்று மத்திய அரசுக்குத் தெரியும் அல்லது மத்திய அரசே முடிவெடுக்கும் என்பதைக் கேள்வி கேட்கவும் தொடங்கினர்.

வெவ்வேறு மொழி பேசும் மக்களிடையே தங்களுடைய சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மாற்று மொழிக்காரர்கள் புரிந்துகொள்ளவில்லை அல்லது அக்கறை காட்டவில்லை என்கிற கருத்து வலுப்பட்டதை, மாநிலங்களின் மறுசீரமைப்புக்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட ஆணையமும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய கண்ணோட்டத்துக்கு உள்பட்டு மாநில – மொழி அடிப்படையிலான உரிமைகளுக்கும் பெருமைகளுக்கும் இடம் தரலாம் என்றும் வலுவான மத்திய அரசு வேண்டும் என்றும் கருத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தேசம் முழுவதையும் தானே ஆண்டதால் விட்டுக்கொடுக்க முடிந்தது. இப்படிக் கோரிக்கைகளை எழுப்பியவர்களுக்கும் தேசிய உணர்வு இருந்ததாலும், பிற மொழி, இன, சமூக மக்களுடன் கலந்து பழகும் பண்பு இருந்ததாலும் மாநிலங்களைப் புதிதாக உருவாக்குவதும் ஓரளவுக்கு சுமுகமாகவே நடைபெற்றது.

மொழி உணர்வு

பம்பாய் மாகாணத்தில் குஜராத்தி மொழிக்காரர்களுக்கும் மராட்டியர்களுக்கும் நாளுக்கு நாள் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வந்தது. இறுதியாக, 1960 இல் பம்பாயைத் தலைநகரமாகக் கொண்டு மகாராஷ்டிரம், அகமதாபாத்தைத் தலைநகரமாகக் கொண்டு குஜராத் என்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தி பேசும் - சீக்கியர் அல்லாத மக்கள் வசித்த பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஹரியாணா என்ற மாநிலத்தை 1966இல் உருவாக்கினார்கள். பிறகு வட கிழக்குப் பகுதியில் அசாமிலிருந்து வெவ்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அடுத்து இப்போது உத்தராகண்ட், விதர்பா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவருகின்றன.

கூட்டாட்சி முறை நமக்குத் தேவைதானா என்கிற கேள்வியை மொழி அடிப்படையிலான மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுப்புகின்றன. அது போதாது என்று, தேசிய ஆட்சி மொழியாக – இணைப்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் கொள்கையும் இப்போது இந்தி பேசாத மக்களிடையே குறிப்பாக தென்னிந்தியர்களிடையே எதிர்ப்பை வளர்த்துவருகிறது. சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுகளுக்குள் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி இடம்பெற வேண்டும் என்ற கால வரம்பு தென்னிந்திய மாநிலங்களைத் தொடர்ந்து கொந்தளிக்க வைக்கிறது.

‘இந்தியை ஆட்சி மொழியாக ஏற்பதே நாட்டின் தன்மானத்துக்குப் பெருமை’ என்கிற கருத்தை, இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதை, வட இந்தியா தன்னுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் தென்னிந்தியா மீது திணிப்பதற்கான முயற்சி என்றே அவை பார்க்கின்றன. ராஜாஜி இப்படிக் கூறியுள்ளார்: “(இந்தி தான் பெருமைக்குரியதா?) இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கும் மக்களும் அவர்களுடைய மொழிகளும் இந்தியாவுக்குப் பெருமையில்லையா? வெற்றிகரமான ஜனநாயக வழிமுறைகளில்தான் நியாயம் இருக்கிறது, இதைப் புறக்கணிப்பது நாசத்துக்கே வழிவகுக்கும்”.

கையாண்ட காங்கிரஸ்

அரசின் தேசிய மொழிக் கொள்கையால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்ச்சிவசப்பட்டனர், அவரவர் மொழியைக் காக்க உணர்ச்சிகரமாகத் திரண்டனர், மொழி அடையாளத்தைக் காப்பதில் உறுதியாக இருந்தனர். இந்த விவகாரத்தில் இவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டதே இந்தியக் கூட்டாட்சி இதைத் தாங்குமா, இந்தியா ஒரே நாடாக நீடிக்குமா என்றெல்லாம் சந்தேகங்கள் ஏற்பட்டன. மொழிப் போராட்டங்கள் உச்சம் பெற்றிருந்தாலும், மொழிவழி மாநிலப் பிரிவினைகள் நடந்து முடிந்தாலும் இந்தியா இன்னமும் கூட்டரசாகவே தொடர்வது மிகப் பெரிய அற்புதம்தான்.

இதில் அரசியல் சமரசம் ஏற்படப் பெருமளவு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தீவிரமான கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை, தீவிரமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. கட்சிகளின் மாநிலத் தலைவர்களேகூட இந்த மொழிப் போராட்டக்காரர்களின் அணிகளில் ஊடுருவி, கோரிக்கைகளை வலியுறுத்திய போதும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்கள், பதற்றத்தைத் தணித்து சமரசத்தை ஏற்படுத்த தங்களுடைய திறமை, அனுபவம் ஆகிய அனைத்தையும் பக்குவமாகப் பயன்படுத்தினர். மொழிவழிக் கோரிக்கைகளால் ஏற்பட்ட கோபம் இருந்தாலும், தங்களை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது என்று போராட்டக்காரர்கள் ஒருபோதும் நினைத்துவிடாமல் அரவணைத்தது காங்கிரஸ் கட்சி.

(தொடரும்)

1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து‘ சுதந்திரப் பொன் விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை

(ஹரீஷ் கரே, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர்)

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x