Published : 31 Aug 2022 07:05 AM
Last Updated : 31 Aug 2022 07:05 AM

சொல்… பொருள்… தெளிவு: இந்தியத் தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி யார்?: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் தலையாயவர் என்பது மட்டுமல்லாமல், இந்திய நீதிமன்றக் கட்டமைப்பின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவரும் ஆவார். எனவே, அவர் இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI) என்றும் அழைக்கப்படுகிறார்.

தலைமை நீதிபதியாவதற்கான தகுதிகள்: அரசமைப்புச் சட்டக் கூறு 124, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குப் பின்வரும் தகுதிகளை வரையறுத்துள்ளது: 65 வயதுக்கு உட்ட இந்தியக் குடிநபராக இருக்க வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ பத்தாண்டுகளுக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.

அல்லது இந்தியக் குடியரசுத் தலைவரால் சிறந்த சட்டவியலாளர் (Distinguished Jurist) என்று கருதப்படுகிறவராக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதியின் பணி ஓய்வுபெறும் வயது 65. இவை அனைத்தும் தலைமை நீதிபதிக்கும் பொருந்தும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இருப்பதிலேயே அதிக காலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர் எவரோ அவரே அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.

ஒரே அளவு பணி மூப்புக்கொண்ட இரண்டு நீதிபதிகளுக்கிடையே போட்டி வந்தால், முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டவர் யார், உயர் நீதிமன்ற நீதிபதியாக யார் அதிக அனுபவம் கொண்டவர் என்பது போன்ற அளவுகோல்கள் கணக்கில் கொள்ளப்படும்.

தலைமை நீதிபதி எப்படி நியமிக்கப்படுகிறார்: நீதித் துறையின் ஒப்புதலுடன் மத்திய அரசால் வெளியிடப்பட்ட செயல்முறைக் குறிப்பாணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான விதிகளை வரையறுத்துள்ளது. பணி ஓய்வு வயதை எட்டிவிட்ட தலைமை நீதிபதி ஓய்வுபெறும் தேதிக்கு ஒரு மாதம் முன்னர், அவரிடமிருந்து அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சர் கோருவார்.

பணி மூப்பு வரிசையில் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதியின் தகுதி குறித்து தலைமை நீதிபதிக்குச் சந்தேகம் இருந்தால், அவர் கொலீஜியத்துடன் கலந்தாலோசிப்பார். ஓய்வுபெறப்போகும் தலைமை நீதிபதி தன் பரிந்துரைக் கடிதத்தின் மூலம் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை மத்திய சட்ட அமைச்சருக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிப்பார். சட்ட அமைச்சர், தலைமை நீதிபதியின் பரிந்துரையைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புவார்.

பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில், இந்தியக் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தலைமை நீதிபதியையும் நியமிக்கும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால், அவர் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த நியமனத்தை மேற்கொள்ள முடியும்.

மேலும், யார் அடுத்த தலைமை நீதிபதி என்று தேர்ந்தெடுப்பதில் மத்திய அரசுக்குத் தலைமை நீதிபதியின் பரிந்துரையைக் கேட்டுப் பெறும் அதிகாரம்தான் உள்ளது. தலைமை நீதிபதிக்கும் அவர் உட்பட ஐந்து மூத்த நீதிபதிகளை உள்ளடக்கிய கொலீஜியத்துக்குமே இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. நடப்புத் தலைமை நீதிபதி அளிக்கும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரும் அதிகாரம்கூட மத்திய அரசுக்கு இல்லை.

பணிமூப்புக் கொள்கையும் விதிவிலக்குகளும் விமர்சனங்களும்: இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஹெச்.ஜே.கனியா இறந்த பிறகு, அப்போது பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.சுக்லாவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு முயன்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக அதிக பணி மூப்பு கொண்டவரான சாஸ்திரி.ஜே தான் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் பதவி விலகிவிடுவோம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து, சாஸ்திரி இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகே, பணி மூப்பு அடிப்படையில் தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது. இந்தப் பணி மூப்புக் கொள்கை இதுவரை மூன்று முறை மீறப்பட்டுள்ளது.

நீதிபதி கஜேந்திர கட்கர் (1964), ஏ.என்.ரே (1973), எம்.ஹெச்.பெக் (1973) ஆகியோர் அவர்களைவிட அதிகப் பணி மூப்புகொண்ட நீதிபதிகளை மீறி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் நடைமுறை பின்பற்றப்படுவதற்கு வழிவகுத்த வழக்கில் (1993) உச்ச நீதிமன்றத்தின் அதிகப் பணி மூப்பு கொண்ட நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பணி மூப்புக் கொள்கையின் அடிப்படையில் தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, நீதிமன்றச் செயல்பாடுகள் சார்ந்த தகுதியின் அடிப்படையில் தலைமை நீதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற வாதங்களும் இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தலைமை நீதிபதி நியமனத்தில் பணி மூப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

பணி மூப்புக் கொள்கையின் காரணமாகத் தலைமை நீதிபதியாகும் ஒருவரின் பதவிக் காலம் பெரும்பாலும் மிகவும் குறைவாக இருப்பதும் அதற்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. யார் அடுத்த தலைமை நீதிபதி என்பதில் அரசியல் தலையீடுகளைப் பணி மூப்புக் கொள்கை தவிர்க்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக யார், எப்போது நியமிக்கப்படுகிறார்கள் என்பதில் சில திட்டமிட்ட கணக்குகள் சார்ந்த இடையீடுகளைச் செய்வதன் மூலம், யார் தலைமை நீதிபதியாகிறார் என்பதில் மத்திய அரசு அரசியல்ரீதியான செல்வாக்கு செலுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

தலைமை நீதிபதியின் பணிகள், அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சமமானவர்களில் முதலாமவர் (First among Equals) என்றழைக்கப்படுகிறார். நீதிபதியாக அவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளுக்கும் சமமான அதிகாரங்கள்தாம். ஆனால், உச்ச நீதிமன்றத்தையும் அதன் செயல்பாடுகளையும் நிர்வகிப்பதிலும் அதன் மூலமாக நீதியை நிலைநாட்டுவதிலும் தலைமை நீதிபதிக்குக் கூடுதல் அதிகாரங்களும் பொறுப்புகளும் உள்ளன.

வழக்கின் தன்மையைப் பொறுத்து எந்த வழக்கை, எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதையும் ஒரு வழக்கை விசாரிக்கும் அமர்வு எத்தனை நீதிபதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதையும் தலைமை நீதிபதிதான் தீர்மானிக்கிறார். அரசமைப்பு சார்ந்த சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அரசமைப்பு அமர்வைத் தலைமை நீதிபதிதான் நியமிக்க முடியும்.

தலைமை நீதிபதி உட்பட பணிமூப்பில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நீதிபதிகளை உள்ளடக்கிய கொலீஜியம்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் இறுதி முடிவெடுக்கிறது. நீதிமன்ற அதிகாரிகளை நியமித்தல், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு, மேற்பார்வை தொடர்பான விவகாரங்களையும் தலைமை நீதிபதியே கவனித்துக்கொள்வார்.

தலைமை நீதிபதியின் பதவி நீக்கம்: நிரூபிக்கப்பட்ட தீய நடத்தை அல்லது திறனின்மை ஆகிய இரண்டு காரணங்களின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட முடியும். இதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இது தலைமை நீதிபதிக்கும் பொருந்தும். வரலாற்றில் இதுவரை ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதிகூடப் பதவிநீக்கம் செய்யப்பட்டதில்லை.

தொகுப்பு: கோபால்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x