Last Updated : 11 Mar, 2022 07:55 AM

 

Published : 11 Mar 2022 07:55 AM
Last Updated : 11 Mar 2022 07:55 AM

உத்தராகண்ட், மணிப்பூர், கோவா: பாஜக வென்றது எப்படி?

உத்தராகண்ட்: பாஜகவின் கோஷ்டிப் பூசல், ஆட்சி மீதான புகார்களால் இங்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற எண்ணம் அக்கட்சி மேலிடத்துக்கு இருந்தது. அதன் எதிரொலியாகவே 4 மாதங்களில் 3 முதல்வர்கள் இங்கு மாற்றப்பட்டார்கள்.

விவசாயிகளின் தொடர் போராட்டங்கள், ஹரித்துவாரில் துறவிகளின் வெறுப்புப் பேச்சு, கரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம் என ஆளும் பாஜகவைச் சர்ச்சைகள் சுற்றியபோதும் மீண்டும் பாஜகவுக்கே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

அதற்கு மாநில ஆட்சியைத் தாண்டி பிரதமர் மோடி மீதான நம்பிக்கை பாஜகவுக்குக் கைகொடுத்திருக்கிறது. மாறாக, உத்தராகண்டில் சரியான தலைமையைக் காங்கிரஸால் உருவாக்க முடியாமல் போனது. தலித் தலைவர் யஷ்பால் ஆர்யா, அவருடைய மகன் சஞ்சீவ் ஆகியோரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவந்தது சாதகமாகப் பார்க்கப்பட்டது.

உத்தராகண்டில் தலித் முதல்வர் என்று பேசிவந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், தன்னுடைய நிலைப்பாட்டைக் கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது அக்கட்சிக்கு பின்னடைவாக மாறியிருக்கக்கூடும். மேலும் காங்கிரஸால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இங்கும் தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறின.

மணிப்பூர்: 2002-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலம் மணிப்பூர். ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. பீரேன் சிங் முதல்வரானார். ஆனால், அந்தக் கூட்டணியால் பாஜக அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொண்டது. எனவே, இத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டுதான் பாஜக களமிறங்கியது. காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் தனித்துக் களம்கண்டன. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

மணிப்பூரில் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது முக்கியமான பிரச்சினை. ஆனால், மற்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் அதையே முக்கியப் பிரச்சினையாகப் பேசின. மாறாக, எதிர்க்கட்சிகள் பலமாக இருந்த பகுதிகளில் ஆயுதக் குழுக்களின் ஆதரவைப் பெறுவதில் பாஜக முனைப்பு காட்டியது. மோடியும் அமித் ஷாவும் மணிப்பூரில் நடத்திய தொடர் பேரணிகள், அளித்த வாக்குறுதிகள் போன்றவை பாஜகவை நோக்கி மீண்டும் மாநில மக்களைத் திரும்ப வைத்திருக்கிறது.

கோவா: கோவாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியும் வீழ்த்துவது என்று காங்கிரஸ் கட்சியிடம் முனைப்பு இருந்தது. ஆனால், அக்கட்சித் தலைவர்களின் வழக்கமான பெரியண்ணன் தோரணை மீண்டும் காங்கிரஸுக்குத் தோல்வியைத் தந்திருக்கிறது. கோவாவில் புதிதாகக் களமிறங்கிய மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன் ஒரு பனிப்போரை காங்கிரஸ் நடத்திவந்தது. அதன் விளைவாக மஹாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியும் திரிணமூல் காங்கிரஸும் தனி அணியாகக் களமிறங்கின.

கூட்டணியை நாடி வந்த தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகளையெல்லாம் காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆளுங்கட்சியின் எதிர்ப்பலையைத் தங்களுக்கான வாக்குகளாகக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் பெறுவதில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. விளைவு, சிதறிய வாக்குகளால் பாஜக மீண்டும் கோவாவைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த தேர்தலைவிட பாஜக கூடுதலாக ஒரு சதவீத வாக்குகளைத்தான் பெற்றிருக்க, காங்கிரஸோ 5% வாக்குகளை இழந்திருக்கிறது. கோவாவில் காங்கிரஸ் தேய்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம்.

- டி. கார்த்திக், தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x