Published : 04 Mar 2022 08:27 AM
Last Updated : 04 Mar 2022 08:27 AM
தமிழ்நாட்டின் இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க திமுக அரசு தயாராகிவருகிறது. இந்நேரத்தில், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளில் சிலவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்!
ஒருங்கிணைந்த செயல்பாடு
தமிழ்நாட்டில் வேளாண் துறை, நீர்ப் பாசனத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் வகையில், தலைமைச் செயலாளர் நிலையிலான உயர் அதிகாரி தலைமையில், துறைகளின் முதன்மைச் செயலாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஏற்படுத்திட வேண்டும். மேலும், தொடர்புடைய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்குக் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து, அவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த உயர்மட்டக் குழு இயங்கிட வேண்டும்.
பாசனக் கால்வாய் பராமரிப்பு
காவிரிப் படுகை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களைத் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மார்ச் மாதமே தூர்வாரும் பணிகளையும், பராமரிப்புத் தலைப்பின்கீழ் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு கட்டுமானங்களைச் சீரமைக்கும் பணிகளையும் தொடங்க வேண்டும். கடந்த ஆண்டு குடிமராமத்துத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. நடப்பாண்டு அதனை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். நீர்ப்பாசனத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் பங்களிப்போடு பாசன, வடிகால்களைத் தூர்வாருவதற்கு வாய்ப்பாகப் பாசனதாரர் சபைகளை உருவாக்கி, அவற்றின் மூலமாக நிறைவேற்றிட வேண்டும்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி, வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையிலும் சாகுபடியைத் தொடங்குவதற்கு வாய்ப்பாகவும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,000 ஊக்க நிதியாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்திட வேண்டும்.
உழவர் சந்தைகளைத் தேவைக்கேற்ப நகரியம், பேரூராட்சிகள், பெரும் ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசியல் தலையீடு இன்றிக் கடைகள் முழுமையும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கிட வேண்டும். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, உள்நாட்டு மீன் வளர்ப்பு உள்ளிட்ட கூட்டுப் பண்ணைத் திட்டங்களை உருவாக்கியும் அவற்றை ஒருங்கிணைத்தும் உற்பத்தியாளர் குழுக்கள் லாபகரமான விலையில் சந்தைப்படுத்தும்வகையில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்.
சந்தை வாய்ப்புகள்
சந்தை ஒப்பந்தச் சாகுபடித் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேளாண் துணை இயக்குநர் தலைமையில் சந்தைப்படுத்துவதற்கான குழுவை ஏற்படுத்திட வேண்டும். அக்குழுவில் விவசாயிகள் சாகுபடி செய்யவுள்ள பயிர்கள் குறித்து முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும். அரசு நிர்ணயிக்கும் விலைக்குக் குறைவில்லாமல் கொள்முதல் செய்வதற்கான வணிக நிறுவனங்களை ஆவன செய்ய வேண்டும். கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான தொகை உரிய காலத்தில் கிடைப்பதற்கு இக்குழு விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
வெளிச்சந்தையில் போட்டியை உருவாக்குவதற்கு வாய்ப்பாக கிராமந்தோறும் உற்பத்திப் பொருட்களை அதற்கான அளவைக் கணக்கில்கொண்டு சேமிப்பதற்கான கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கு உத்தரவாதமும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, அரிசியை மூலப்பொருளாகக் கொண்டு உயர் ரக ஒயின் போன்ற மதுபானங்கள் தயார் செய்வதற்கான ஆலைகளை உருவாக்க வேண்டும். வாழை உள்ளிட்ட பழவகைகளைப் பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்து ஏற்றுமதி செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் அடிப்படைக் கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். பழச்சாறு தொழிற்சாலைகளைத் தேவைக்கேற்ப உருவாக்கிட வேண்டும்.
மண்ணுக்கேற்ற பயிர் வகைகள்
தமிழ்நாட்டில் ஐவகை நிலப் பகுதிகளையும் அடையாளப்படுத்தி மண்ணுக்கேற்ற, பருவகாலச் சூழல்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்வாரி முறைகளைக் கண்டறிந்து சாகுபடி செய்வதைக் கட்டாயமாக்கிட வேண்டும்.
மலர் வகைகளை வாய்ப்புள்ள இடங்களில் சாகுபடி செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான குளிர்பதனக் கிடங்குகளைப் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பாடு செய்திட வேண்டும். வாசனைத் திரவியத் தொழிற்சாலை ஏற்படுத்தி உலகளாவிய சந்தையில் விற்பனை செய்வதற்கான உத்தரவாதத்தை அரசு உருவாக்க வேண்டும்.
கரும்புக்குப் புத்துயிர்
நாட்டுச் சர்க்கரை உற்பத்தியைப் பெருக்குவதற்கு நாட்டுவெல்லம், அச்சுவெல்லம், உருட்டுவெல்லம் தயார் செய்யும் சிறுதொழில்களையும் உருவாக்கிட வேண்டும். அவை உலகளாவிய சந்தையில் விற்கும் நிலையையும் உருவாக்கிட வேண்டும். கரும்பு உற்பத்தியை மீண்டும் பெருக்குவதற்கு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி, தொகுப்பு முறையில் வழங்க வேண்டும். குறிப்பாக மின்சாரம், மதுபானம், சர்க்கரை தயாரிப்பதற்கான அனுமதிகளை வழங்கிட வேண்டும். மேலும் எத்தனால் ஒதுக்கீட்டைக் கூடுதலாக்கிட முன்வர வேண்டும்.
கூட்டுறவு மின்னுற்பத்தி
வைக்கோல், கரும்புச் சக்கை உள்ளிட்ட பொருட்களை மூலப்பொருள்களாகக் கொண்டு, கிராமங்கள்தோறும் விவசாயிகள் பங்களிப்போடு கூட்டுறவு மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும். கிராமங்களில் குறிப்பாகப் பாசன ஆறுகள், கால்வாய்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தியை விவசாயிகள் பங்களிப்போடு கூட்டுறவு அமைப்பின் மூலம் மேற்கொண்டு வருவாய்ப் பெருக்கத்தை உருவாக்க வேண்டும்.
வேளாண் தொழில் பூங்கா
காவிரிப் படுகை போன்ற பெருவிளைநிலப் பகுதிகளில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வேளாண் தொழில் பூங்காக்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் பங்களிப்புடன் கூட்டுறவு வாகன, இயந்திர வாடகை மையங்களை உருவாக்கிட வேண்டும். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி கொடுத்து வேளாண்மையோடு சேர்ந்த இயந்திரத் தொழில் மேம்பாட்டை உருவாக்கிட வேண்டும்.
பனை, தென்னை வளர்ப்பு
பதநீர் விற்பனை மற்றும் பனை உற்பத்திப் பெருக்கத்துக்குக் கதர் கிராமத் தொழில் வாரியத்தை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் தரிசு நிலங்களிலும், மானாவாரி நிலங்களிலும் பனை, தென்னை வளர்ப்பை லாபகரமான தொழிலாக ஊக்கப்படுத்த முடியும். தென்னையில் நீரா பானம் தயார் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும். பனைமரத்தில் கிடைக்கக்கூடிய பதநீரைக் கொண்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.
- பி.ஆர்.பாண்டியன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT