Last Updated : 07 Nov, 2017 09:13 AM

 

Published : 07 Nov 2017 09:13 AM
Last Updated : 07 Nov 2017 09:13 AM

இந்தி ஆதிக்க எதிர்ப்புணர்வைத் தமிழர்களிடமிருந்தே கற்றோம்!

தமிழுக்கும் கன்னடத்துக்கும் நீண்ட உறவு இருப்பதைப் போல, எனக்கும் தமிழர்களுக்கும் ஆழமான உறவு உண்டு. எனது குடும்பம் பெங்களூருவில் வசித்த ஸ்ரீராமபுரம் தமிழ் தலித்துகளால் நிறைந்திருந்தது. என்னுடைய வீட்டில் சோற்றுக்குக் குழம்பு இல்லாவிட்டால் பக்கத்து வீட்டில் இருக்கும் அவர்களது வீட்டிலிருந்துதான் அம்மா வாங்கி வருவார். வீட்டைச் சுற்றி எங்கு பார்த்தாலும் எம்ஜிஆர் பாட்டு, திமுக கொடி, பெரியார், அண்ணா, கருணாநிதி படங்கள் வியாபித்திருக்கும்.

வார இறுதி நாட்களில் திராவிட இயக்கக் கூட்டங்களும் பிரச்சாரப் பாடல்களும் களைகட்டும். பெங்களூருவில் இருந்த தமிழ்த் தலைவர்கள் பலர் அண்ணா, கருணாநிதியைப் போல அடுக்குமொழியில் அழகாகப் பேசுவார்கள். ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், பெரியார் நகர் என எங்கு கூட்டம் நடந்தாலும் நான் அங்கு இருப்பேன். அப்போதுதான் பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோரின் பேச்சையெல்லாம் அறிந்தேன். இந்தக் கூட்டங்களில் தமிழில் கேட்ட அலங்கார நடைப் பாணியை அப்படியே, கன்னடத்தில் மாற்றிப் பேசிக் கைத்தட்டல்களை அள்ளுவேன்.

புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனையில் மூழ்கியிருந்த எனக்கு அவரது நண்பரான பெரியாரின் கடவுள் எதிர்ப்பு, சாதி ஒழிப்புக் கருத்துகள் உற்சாகத்தைத் தந்தன. மகாராஷ்டிராவிலிருந்து தலித் விடுதலையுணர்வைப் பெற்ற நான், தமிழ்நாட்டிலிருந்தே தாய்மொழிப் பாதுகாப்புணர்வைப் பெற்றேன். தமிழகத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் வெடித்தபோது, கர்நாடகாவிலிருந்த தமிழ் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள்.

அவர்களோடு நானும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றேன். அந்தக் காலக்கட்டத்தில் கர்நாடகாவில் ஏற்பட்ட ‘பூசா இலக்கிய’ கலவரத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டேன். அப்போது பெங்களூரு வந்திருந்த பெரியார் இதைக் கண்டித்துப் பேசியதோடு, என்னை மேடையில் ஏற்றியும் பாராட்டினார்.

பெரியாருடனான இந்தச் சந்திப்பை மறக்கவே முடியாது. அதேபோல பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்ட காலகட்டத்தில், அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பும் நெருக்கமும் மறக்க முடியாதது.

தமிழர்களின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்தே, கர்நாடகாவில் கன்னடப் பாதுகாப்புப் போராட்டங்கள் அதிகரித்தன. மக்களுக்குக் கன்னட மொழியுணர்வை ஊட்டும் வகையில் புதிய திட்டங்கள் பிறந்தன. இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தும், கன்னடத்தைக் காக்கவுமான போராட்டங்கள் இப்போது அதிகரித்துள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மைல் கற்களிலும் உள்ள இந்தி எழுத்துகள் அகற்றப்படுகின்றன. பள்ளிகளிலும் வங்கிகளிலும் மத்திய அரசுப் பணிகளிலும் இந்தி யைத் திணிப்பதை வலுவாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறோம். மூன்றாம் மொழி என்கிற பெயரால் இந்தி நுழைவதைத் தடுக்க, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்து கிறோம். கர்நாடகாவுக்குத் தனிக் கொடி கேட்கிறோம். மாநில சுயாட்சி நோக்கி நகர்கிறோம். இதற்கெல்லாம் ஒரு வகையில் தமிழகமே முன்னோடி.

எங்களது மொழியைப் பாதுகாக்கத் திரள்வதால், தற்போது கர்நாடகாவுக்குத் தனி அடையாளம் உருவாகிவருகிறது. மொழி உரிமையைப் பேசுவதால், எங்கள் நிலமும் வளமும் காக்கப்படுகிறது. எங்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டமும், தனி தேசிய இன அடையாள குரலும் நாடு தழுவிய அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

எங்களின் தனித்த குரல், தற்போதைய மத்திய பாஜக அரசின் ஒற்றை மொழி, ஒற்றைக் கொள்கை, ஒற்றை வரி, ஒரே நாடு என்ற முழக்கத்தைத் தகர்க்கிறது. இப்படி ஒரு சூழலில், எங்கள் முன்னோடியான தமிழகம் தற்போது மௌனித்திருப்பதைப் பார்ப்பதற்குத் தாங்கமுடியவில்லை. பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும் முன்னெடுத்த அரசியலிலிருந்து அது விலகக் கூடாது. மோடியின் ஆட்சியில் மனம் தானாக கருணாநிதியைத் தேடுகிறது!

தமிழில்: இரா.வினோத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x