Published : 31 Oct 2023 04:45 PM
Last Updated : 31 Oct 2023 04:45 PM

உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் 3,000 ஆண்டுகள் பழமையான அபூர்வ பாறை ஓவியங்கள்!

உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலை

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் புத்தூர் மலை உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 50-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களை கலை வரலாற்று ஆய்வாளர் க.த.காந்திராஜன் தலைமையில் சோலை பாலு மற்றும் குழுவினர் கண்டறிந்துள்ளனர். பெருவணிகப் பாதையில் அமைந்துள்ள இம்மலை வணிகர்களுக்கு பழங்காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. மலையிலிருந்து கிழக்கு நோக்கி சென்றால் மதுரைக்கும், மேற்கு நோக்கி சென்றால் கேரளாவுக்கும் செல்லும் பாதையில் இம்மலை அமைந்துள்ளது. இங்கு இனக்குழுக்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அக்குழுவினர் வரைந்த சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை யான பாறை ஓவியங்கள் உள்ளன.

வில்லாளியின் பாறை ஓவியம்

இதில் சின்னச் சின்ன 50-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இதில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. இதில் வில்லுடன் கூடிய மனித உருவங்கள் வேட்டைச் சமூகமாக மனிதர்கள் இருந்ததற்கான ஆதாரம். வேளாண் சமூகங்களை விளக்கும் வகையில் ஓவியங்களும் உள்ளன. இந்த இடத்தை பொருத்தவரை சமவெளியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இம்மலை உள்ளது. இதன் அடிவாரத்திலிருந்து 500 மீ. தூரத்தில் அசுவமாநதி ஓடுகிறது.

இதுகுறித்து கலை வரலாற்று ஆய்வாளர் க.த.காந்திராஜன் கூறியதாவது: உசிலம்பட்டி அருகே எ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி செல்லும் வழியில் புத்தூர் மலை உள்ளது. இங்கு சமவெளியிலிருந்து 250 மீ. தூரத்தில் இம்மலை அமைந்துள்ளது. இங்கு வேட்டைச் சமூகம், வேளாண்மைச் சமூகம், கலப்பு பொருளாதாரமாக இருந்த கால கட்டங்களைச் சேர்ந்த ஓவியங்கள்உள்ளன.

இனச்சேர்க்கையை உணர்த்தும் பாறை ஓவியம் உள்ளிட்டவை

இதில் குதிரைகளில் பயணிக்கும் வீரர்கள், குதிரை வீரரை ஆயுதங்கள் மூலம் மற்றவர்கள் மிரட்டுவது போன்ற ஓவியங்கள், நடக்கும் மனிதர்கள், ஓடும் மனிதர்கள், வில்லை ஏந்திய வீரர்கள் (வில்லாளிகள்) மற்றும் சின்னச்சின்ன ஓவியங்கள் என 50-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் உள்ளன. மேலும், 10-க்கும் மேற்பட்ட குறியீடு களும் உள்ளன.

மேலும், முக்கியமாக மனித இனச்சேர்க்கையை விளக்கும் ஓவியங்களை நேர்த்தியாக வரைந்துள்ளனர். இதேபோன்ற ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் காணப்படுகின்றன.ஆண், பெண் வேறுபடுத்தும் வகையில் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. வரலாற்று காலத்துக்கு முந்தைய கால மனிதர்களின் தடயங்களாக இவை உள்ளன.

கீழடி அகழாய்வில் நகர நாகரிக வளர்ச்சி அடைந்த மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. அதேபோல், கீழடிக்கு முந்தைய கால கட்டங்களில் வாழ்ந்த மக்களின் ஆதாரங்களாக இந்த பாறை ஓவியங்கள் இருக்கலாம். இதற்கு முன்னர் ஆண்டிபட்டி கணவாய், குறிஞ்சிநகர் பகுதியில் 3 இடங்கள், செம்பாறை பொடவு, வெள்ளப்பாறை பொடவு, சித்திரக்கல் பொடவு, வகுரணி என 6 இடங்களில் பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளோம்.

கலை வரலாற்று ஆய்வாளர் க.த.காந்திராஜன்

தற்போது கூடுதலாக புத்தூர் மலையில் கண்டறிந்துள்ள பாறை ஓவியங்களை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டால் பழந்தமிழர்களின் வாழ்க்கை முறைகள், வரலாறு வெளிப்படும். இதன் மூலம் மூத்த குடி தமிழ் குடி என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x