Published : 31 Oct 2023 03:18 PM
Last Updated : 31 Oct 2023 03:18 PM

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கழிப்பறைக்கு ரூ.10 வசூல்: காற்றில் பறந்த ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆட்சியர் உத்தரவை மீறி கழிப்பறையை பயன்படுத்த பக்தர்களிடம் அடாவடியாக பணம் வசூலிக்கப்படுகிறது. 'மலையே மகேசன்' என போற்றப்படும் ‘திரு அண்ணாமலையை’ கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். தினசரி கிரிவலம் செல்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மற்றும் கழிப்பறைகள் மூடப்பட்டிருக்கும். இதனால், பணம் செலவழித்து குடிநீர் வாங்கும் நிலை தொடர்கிறது. மேலும், இயற்கை உபாதைக்காக மறைவான இடங்களை தேடி செல்லும் துயரமும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பவுர்ணமி நாட்களில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. கழிப்பறைகளும் திறக்கப்படும். இதற்கு கட்டணம் வசூல் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவையும் மீறி, கழிப்பறைகளில் பணம் வசூலிப்பது தொடர்கிறது. ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் கிரிவலம் சென்ற பக்தர்களிடம், வழிப்பறி கொள்ளை போன்று பணம் வசூலித்துள்ளனர். அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள கழிப்பறையில் ஒரு நபருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசிக்கின்றனர். பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வணங்குகின்றனர். இதர நாட்களிலும் கிரிவலம் தொடர்கிறது. கிரிவலப் பக்தர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஆகியவை இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், குறிப்பாக, கழிப்பறைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஒரு நபருக்கு 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பராமரிப்பு செலவு மற்றும் உள்ளாட்சியில் உள்ள அதிகாரிகளை ‘கவனிக்க’ வேண்டும் என பணம் வசூலிப்பவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். இலவச கழிப்பறை என சுட்டிக்காட்டியும், கண்டுகொள்ளவில்லை. மேலும், பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் இளைஞர்கள் அமர்ந்து கொண்டு பணம் வசூலிக்கின்றனர். பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீரை தினசரி வழங்கி, இலவச கழிப்பறையை பயன்படுத்த ஆட்சியர் பா.முருகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x