Published : 31 Oct 2023 02:54 PM
Last Updated : 31 Oct 2023 02:54 PM

“அது நடந்திருக்கக் கூடாது'” - பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிரான கோஷம் குறித்து ஓபிஎஸ் கருத்து

மதுரை: “பசும்பொன் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை செல்ல முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது: ''காவிரி ஆற்றுப் படுகை ஒரு பன் மாநில ஆறாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஓர் ஆறு இரண்டு, மூன்று மாநிலங்கள் வழியாக ஓடுகின்ற போது, அந்த மூன்று மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிறது என்றுதான் சொல்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு அதற்கான அரசாணை பெற்று தந்தவர் ஜெயலலிதா.

அந்தத் தீர்ப்பின்படிதான் காவிரி நதிநீர் ஆணையம், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை தற்போது காவிரி ஒழுங்காற்று குழுமம் என்கிற பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக காவிரி நதியின் நீரை எவ்வாறு பங்கிடுவது, வறட்சி ஏற்பட்டால் அதை எப்படி பங்கிடுவது என்பதெல்லாம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து ஓர் அரசு மீறுவது என்பது இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாகத்தான் அர்த்தம். அவர்கள் எந்தவித உயர்ந்த பதவியில் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை யாரும் மீறக் கூடாது என்பதுதான் நம்முடைய சட்டம். அந்தச் சட்டத்தை மீறுபவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாகத்தான் அர்த்தம். இதில் தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை.

தொடர்கதையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது வேடிக்கையாக இருக்கிறது, வாடிக்கையாக இருக்கிறது. இதனால் தமிழகத்தின் மீனவர்கள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண தமிழக முதல்வர் மற்றும் பாரதப் பிரதமரும் இலங்கை அரசை தொடர்பு கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டம், இதில் மக்களுடைய திட்டங்கள், மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இரு தரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.

புதிய கட்சி தொடங்குவதற்காக தேவரிடம் வேண்டிக் கொண்டீர்களா என்ற கேள்வி கேள்கிறீர்கள். கனவு காண்பதற்கு நீங்கள் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது. நான் ஏற்கெனவே சமூக வலைதளங்கள் மூலமாக பசும்பொன் என்கிற புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித தொந்தரவு துயரத்தை கொடுக்கக் கூடாது என்பதை தெரிவித்து இருக்கிறேன். பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது.

பத்தாண்டுகள் சிறை தண்டனைபெற்றோர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்துக்காக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கூறியது தீர்வாகாது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசுவது தீர்வாகாது. அது மிகவும் கண்டனத்திற்குரியது'' என்றார் ஓபிஎஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x