ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் தூதர் உறுதி!
புது டெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், ‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும்’ என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதியளித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அனுமதிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, “ஆம். ஏனெனில் இந்தியாவும் நாங்களும் நண்பர்கள். இதை நீங்கள் எதிர்காலத்தில் காண்பீர்கள். ஏனெனில், நாங்கள் அதை உறுதியாக நம்புகிறோம். ஈரானும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுக்குப் பொதுவான நலன்களும், பொதுவான எதிர்காலமும் உள்ளன.
இந்திய மக்களின் துன்பம் எங்கள் துன்பமே; அதுபோலவே எங்கள் துன்பமும் இந்திய மக்களின் துன்பமாகும். இந்தக் காரணத்தினால், இந்திய அரசாங்கம் எங்களுக்கு உதவுகிறது; நாங்களும் இந்திய அரசாங்கத்துக்கு உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள தூதர்களாகிய நாங்கள், இந்தப் பிராந்தியத்தில் எங்களுக்குப் பொதுவான எதிர்காலம் இருப்பதாக நம்புகிறோம். இந்தக் காரணத்தினால், ஈரானின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும், இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வழிவகை செய்யுமாறு இந்தியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
இதனிடையே, இந்தியாவில் உள்ள ஈரானின் உச்சத் தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஹார்முஸ் நீரிணையை மூடிவிட வேண்டும் என்று தங்கள் நாடு ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், சில கப்பல்கள் இப்போதும் அந்த வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் கூறியதும் கவனிக்கத்தக்கது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் இன்று 14-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்தப் பின்ணியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
