Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08
Updated on
4 min read

‘சுக ராகம் சோகம் தானே...!’ என்பதுபோல் வாழ்க்கையில் நம்மை பக்குவப்படுத்துவது நாம் சந்திக்கும் சோதனைகளாக மட்டுமே இருக்க முடியும்!

தோல்விகள், நிதி இழப்புகள், உறவுகளைப் பிரிதல், துரோகங்கள், அவதூறுகள் என சோதனைகளின் முகம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், என்றேனும் நம்மை நாமே பக்குவப்பட்ட நபராக உணர்ந்து திரும்பிப் பார்த்தால் என்றோ நம்மைப் புரட்டிப் போட்ட துயரங்கள்தான் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை அணுகுவதில் ஒரு நிதானத்தைத் தந்து கொண்டிருக்கிறது என்று புரிதல் வரும்.

அப்படி, வெளிநாட்டில் தன் பணியிடத்திலும், தன் தனிப்பட்ட உறவிலும் ‘கெத்துக்காரி’யாக உலா வரும் ஓர் இளம் பெண் மருத்துவர், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து வெளிவருவதும், அந்தப் பயணத்தில் தன்னைத் தானே சுயபரிசோதனைக்கு உள்ளாக்கி இறுதியில் ஒரு நிதான வாழ்வியல் அணுகுமுறையைக் கண்டடைவதும் தான் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள ‘அக்யூஸ்டு’ (Accused) படத்தின் ஒன்லைன்.

இப்படத்தை அனுபூதி கஷ்யப் இயக்கி இருக்கிறார். இயக்குநர் அனுராக் கஷ்யப், தயாரிப்பாளர் அபினவ் கஷ்யப் ஆகியோர் இவருடைய சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியில் இந்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழிலும் காணக் கிடைக்கிறது.

படத்தின் தொடக்கத்திலேயே நாயகி டாக்டர் கீதிகா சென் (கொன்கனா சென் சர்மா) - டாக்டர் மீரா ( பிரதீபா ரன்டா ) இருவரும் தன்பாலின இணையர் என்பது வெகு இயல்பாகக் கடத்தப்படுகிறது. வீட்டில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு தாமதமாக வரும் இணையருக்காக காத்திருப்பது போல் புலம்பல்களோடு, செல்லக் கோபங்களையும் சேர்த்து, வந்திருப்பர்களிடம் புகார் கூறிக் கொண்டு காத்திருக்கிறாள் மீரா.

படம் நெடுகிலும் எந்தவொரு இடத்திலும் தன்பாலின ஈர்ப்பு, உறவு பற்றிய பார்வை வலிந்து திணிக்கப்படவில்லை. இதனை, ‘தன்பாலின உறவை அங்கீகரியுங்கள்’ என்பது ரீதியிலான மெசேஜ்கள் குறைந்தபட்சம் படித்து, வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட இந்தியச் சமூகத்துக்குத் தேவைப்படவில்லை என்ற நிலை இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆறுதலோடு நகர்ந்தால் அடுத்தக் காட்சியிலேயே கீதிகா - மீரா மருத்துவ இணையர் ஏற்பாடு செய்த விருந்துக்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம். கீதிகாவுக்கு அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் ‘டீன்’ பதவி கிடைத்திருக்கிறது மற்றும் இணையர் மீராவின் விருப்பத்துக்கு ஏற்ப இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு ஒப்புதலும் கிடைத்திருக்கிறது. பணியிலும், குடும்பத்திலும் புரோமோஷன் என்று விழா எடுத்து அவர்கள் பகிர்ந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு!

அடுத்தநாள் காலையிலேயே மருத்துவமனையின் மனிதவள மேலாளர் சிம்ரனிடமிருந்து கீதிகாவுக்கு அவசர அழைப்பு வருகிறது. அங்கு அவள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, முகவரியற்ற மின்னஞ்சல் வந்துள்ளதை சிம்ரன் காட்டுகிறார்.

பொதுவாகவே பாலியல் குற்றச்சாட்டு என்பது மிகக் கனமானது. வேறெந்தவொரு குற்றத்துக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும் சட்டமும், சமூகமும் பாலியல் குற்றத்தை முழுக்க முழுக்க தனிநபரின் தன்மையை வைத்தே அலகிடுகிறது. அதுவும் ஆண் மீதான பாலியல் குற்றச்சாட்டைவிட பெண் மீதான பாலியல் குற்றச்சாட்டு சமூகத்தின் அத்தனை கண்களையும் அவளை நோக்கி எளிதில் திருப்பிவிடக் கூடியது.

அதுதான் கீதிகாவுக்கும் நேர்கிறது. ஒன்று, இரண்டு என அடுத்தடுத்து 8 இ-மெயில்கள் ‘மீ டூ’ ரகத்தில் கீதிகாவுக்கு எதிராக மருத்துவமனைக்கு வந்து சேர்கிறது. கூடவே, அவள் மீதான புகார்களை விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் கமிஷனும் அமைக்கப்படுகிறது.

விசாரணையின்போது கீதிகா அங்கேயே பணி புரிந்தால், சாட்சிகள் மீது அழுத்தம் இருக்கும் என்பதால் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்படுகிறது. அதுநாள் வரை மருத்துவமனையில் அவளைப் பார்த்து பணிந்து, எதிர்த்துக் கேள்வி கேட்கத் தயங்கி நின்றவர்கள் எல்லோரும் அவளை விவாதப் பொருளாக்கிக் கொள்கின்றனர். முன்னர் பணி நிமித்தமாக அவள் கடிந்து கொண்டதை மனதில் வைத்துக் கொண்ட ஜூனியர் டாக்டர், இதுதான் தக்க தருணம் என்று கீதிகாவை உதாசீனப்படுத்துகிறார்.

லண்டனின் சிறந்த மகப்பேறு மருத்துவர், இளம் வயதிலேயே தன் பணியில் சிறந்து டீன் பொறுப்பு வரை உயர்ந்தவள் என்ற அடையாளத்தில் மட்டுமே தனது உலகத்தை கெத்தாகக் கட்டமைத்துக் கொண்ட கீதிகாவுக்கு தன் மீதான குற்றச்சாட்டும், அதை வைத்து மருத்துவமனை முதல் சமூக ஊடகம் வரை விரியும் மலினமான விமர்சனங்களும் அவளை நொறுக்க முயற்சிக்கிறது.

இயல்பிலேயே துணிச்சலான, தன் முடிவுகளில் உறுதியாக நிற்பவளான கீதிகா, தன் மீதான பாலியல் புகார்களில் இருந்து இருந்து விடுபட வேண்டும் என்று முயற்சிக்கிறாள். படித்து மருத்துவரானதைவிட, உயர் பதவிக்கு உயர்ந்ததைவிட, தன் பாலியல் தேர்வில் தனக்காக நின்றதைவிட, இந்தக் குற்றச்சாட்டு அவளுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.

காலித் ஹுசைனியின் ‘ஆயிரம் அற்புதமான சூரியன்கள்’ (A Thousand Splendid Suns ) நாவலில் ஒரு வரியை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

ஒரு திசைகாட்டியின் வடக்கை காட்டும் ஊசியைப் போல், ஓர் ஆணின் குற்றச்சாட்டு விரல் எப்போதும் ஒரு பெண்ணைத்தான் சுட்டிக்காட்டும்.”

காலீத் இப்படிச் சொல்லியிருப்பார். அதுபோலத்தான் மருத்துவமனை, ஊடகம், சமூக ஊடகம் என எல்லாமே கீதிகாவை நோக்கி குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்கும்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கீதிகாவை விசாரிக்கும் முன்னாள் பத்திரிகையாளர், அவளுடைய ப்ரொஃபைலப் பார்த்து, “கீதிகா இத்தனை இளம் வயதில் நீங்கள் நகரின் சிறந்த மகப்பேறு மருத்துவர், துறை தலைவர், மருத்துவமனையின் டீன் என்று வளர்ந்துள்ளீர்கள்” என்று கேட்பதை வடக்கு சுட்டும் திசைகாட்டி ஊசியை ஒத்தது எனலாம். இறுதிக் காட்சியில், கீதிகா தரும் பதிலடி தெறிப்பு ரகம்.

கீதிகா தொழில் ரீதியாக உச்ச லட்சியங்கள் (professionally ambitious) கொண்டவள். ஆனால், குடும்ப உறவில் அவளுக்கு விருப்பமான பெண் இணையர் தன்னுடன் இருப்பதைத் தாண்டி எந்த இலக்குகளும் அற்றவள். ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற மீராவின் ஆசை கீதிகாவை பொறுத்தவரையில் ‘அம்பீஷியஸ்’ ரகம் இல்லை. மேலும் மீரா, தொழில் ரீதியாக தன்னை வெற்றி பெற்றவளாக நிறுவவதிலிருந்து விலகுவதற்காக குழந்தை, குடும்பம், வேறு ஊர் என்ற முடிவுகளை முன்வைப்பதாகக் கருதுகிறாள். அதைக் குறிப்பிட்டு மீராவை வார்த்தைகளால் காயப்படுத்தவும் செய்கிறாள்.

கீதிகா தன்னை சிறந்த ஆளுமையாக நினைப்பதன் எல்லை எதுவரை நீள்கிறது என்றால், எனக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை நான் என் போக்கில் சென்று சரி செய்வேன். அதன் நிமித்தமான எனது முயற்சிகளைக் கூட என்னைத் தவிர என்னைச் சார்ந்தவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற ஈகோ வரை அவளை இட்டுச் செல்கிறது.

உண்மையில் மனிதர்கள் எத்தனை பெரிய ஆளுமையாக இருந்தாலும், சக மனிதரின் அன்பும், அரவணைப்பும், ஆலோசனைகளும், துணை நிற்றலும், பங்களிப்பும் இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது. இது பணி நிமித்த கெத்துக்கு மட்டுமல்ல சாதி, மத, பாலின எகத்தாளத்துக்கும் பொருந்தும். மனிதன் தான் ஒரு சமூக விலங்கு என்ற தன்னிலை உணர்ந்தாலே பல சிக்கல்கள் மறைந்தே போகும்.

‘அக்யூஸ்டு’ நாயகி கீதிகாவும் தன் பிரச்சினையைத் தீர்க்க தகுதியானவர்கள் என்று தான் தேர்ந்தெடுக்கும் நபர்களை மட்டுமே அணுகுகிறாள், தனக்காக பணியைக் கூட ராஜினாமா செய்துவிட்டு, அன்பின் வழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இணையரின் அறிவுரைகளை புறக்கணிக்கிறாள். தன்னைவிட வயதில் மிகச் சிறியவள் என்பதாலேயே அவளால் தன்னைப் போல் இந்தப் பிரச்சினையை அணுக முடியாது என்று முடிவு செய்கிறாள். சராசரியான ஆண் - பெண் தம்பதியில் இருக்கும் ஒரு ஆணைப் போலவே மீராவிடம் கீதிகா நடந்து கொள்கிறாள்.

ஒருபுறம் சுயமாக தனக்கெதிரான சதியை முறியடிக்க கீதிகா முயற்சிக்க, மீரா தன் பாதையில் ஒரு பிரைவேட் டிடெக்டிவை அணுகி சில ஆதாரங்களைத் திரட்டுகிறாள். ஆனால், அதைப் பற்றி கீதிகாவிடம் சொல்லிவிட்டே செய்கிறாள். ஒரு கட்டத்தில் இருவருமே தாங்கள் திரட்டிய ஆதரத்தை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதற்குள் அவர்களுக்குள் மிகப் பெரிய விரிசல் வந்துவிடுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கீதிகா தனக்கெதிரான இத்தனை சதிகளையும் செய்தது தன் சக பணியாளர் மருத்துவர் லோகன் என்ற ஆண் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து அவரை சட்டத்தின் முன் நிறுத்துகிறாள். தனியொருத்தியாக சுழன்று தன்னை குற்றமற்றவற்றவள் என்று நிரூபித்த ஆசுவாசம் இருந்தாலும் கூட தான் இன்னும் மனப்பக்குவம் அடைய வேண்டும். அதன் பின்னரே இந்தப் பொறுப்பை ஏற்ககூடும் என்று உணர்வதாகச் சொல்வாள்.

அந்தப் போலி மின்னஞ்சல்கள் சொன்னதுபோல் தான் பாலியல் குற்றவாளி இல்லை என்றாலும் கூட பணியிடத்தில் நான் சற்று கடினமாகவே இருந்துள்ளேன் என்று ஒப்புக் கொள்கிறாள்.

எத்தனை திறமைசாலி என்றாலும் கூட நான் சக ஊழியர்களை இன்னும் கரிசனத்தோடு, கனிவோடு அணுகியிருக்க வேண்டும் என்று சொல்கிறாள். அந்த முதிர்ச்சி வந்தபின்னர் நான் டீன் பதவியை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறும் காட்சி, அவள் வாழ்க்கைகான நிதானத்தை கண்டடைந்ததன் சாட்சி.

தனது இறுக்கமான பண்பால் தன் காதல் தொலைந்துவிடுமோ என்று அஞ்சும் கீதிகா, மீராவை தேடி வருகிறாள். மீராவிடம், “எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடு. எனக்கு இப்போது இந்த உறவை சரிசெய்வதுதான் தலையாயது” என்று கெஞ்சுகிறாள். அந்தக் கெஞ்சலும், அதற்கு மீரா கூறும் பதிலும் காதல் கவிதை.

தனக்கெதிரான பொய்க் குற்றச்சாட்டை உடைக்கும்போது ஆணாதிக்கம், அதிகாரம், ஈகோவையும் சேர்த்து உடைக்கிறார் கீதிகா. நிதானம் அவளுக்குள் ஐக்கியமாகிறது.

உண்மையில், மனித வாழ்வில் அன்பும், நிதானமும்தான் கெத்து!

| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08
Three of Us: ஷைலஜாவின் மறதியும் நினைவுகளும் கடத்தும் அனுபவம் | திரை தேவதைகள் 07

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in