காளியம்மாள் ‘சாய்ஸ்’ அதிமுக ஏன்? - ஒரு விரைவுப் பார்வை
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான காளியம்மாள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது. இப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுகவில் இணைந்திருக்கிறார் காளியம்மாள்.
அதிமுகவில் இணைந்தது குறித்து காளியம்மாள் கூறும்போது, “எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எளிய குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். ஒரு சாமானியரும் தலைவராகும் ஜனநாயக சூழல் இருப்பதால்தான் அதிமுகவை தேர்வு செய்து இருக்கிறேன். ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்கவே அதிமுகவில் இணைந்துள்ளேன்.
மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறார்கள். வரவிருக்கும் தேர்தல் அதற்கான பரிசை தரும். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர்.
நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார்.
இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.