Published : 23 Apr 2023 08:36 AM
Last Updated : 23 Apr 2023 08:36 AM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் 5-ம்கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரையும், இரண்டாம் கூட்டம் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம்தேதி வரையும் நடைபெற்றது. 2023-2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதியும், வேளாண்மை நிதிநிலை அறிக்கை 21-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்படபல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் மே 2-ம் தேதி மாலைசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. பட்ஜெட் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கைநிர்ணயித்துள்ள தமிழக அரசு, சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10, 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடுமூலம் முதலீடுகளைப் பெறுவதற்காக, தமிழக அமைச்சர்கள் வெளிநாடு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் வெளிநாடு பயணம்
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாடு பயணம் மற்றும் அடுத்த மாதம் முதல்வர்மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் வெளிநாடு பயணம் ஆகியவற்றுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில்ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இது தொடர்பாக வரும் 24-ம் தேதி தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுபற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT