Published : 10 Apr 2023 04:19 AM
Last Updated : 10 Apr 2023 04:19 AM
புதுடெல்லி: நாட்டின் பல நகரங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, ஹரியாணா, கேரளா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, டெல்லியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநில அரசுகள் உச்சகட்ட விழிப்புணர்வுடன் செயல்படுமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ வசதிகளை தயார்நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்றும், நாளையும் அவசரகால சிகிச்சைக்கான ஒத்திகைகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளிடம் கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை விரைந்து செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஹரியாணாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா பரவலின் தீவிரம் காரணமாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், பல்வேறு நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறும் மருத்துவமனைகளுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல, உத்தர பிரதேசம், புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சார்பிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நாட்டில் கரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஏப்.9-ம் தேதி (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி 5,357 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,814 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,965 ஆக அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT