Published : 09 Apr 2023 11:37 PM
Last Updated : 09 Apr 2023 11:37 PM

நூற்றாண்டுக்குப் பின் சீரமைக்கப்படும் கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தேர்!

சப்பரத்தேர்

மதுரை: நூற்றாண்டுக்குப் பின் கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தேர் சீரமைப்பு பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகின்றன.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் தேனூரில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளார். அப்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தேரோட்டம் நடப்பதுபோல், பெருமாளுக்கும் தேர் செய்ய எண்ணினார். அதற்கு பல ஆண்டுகளாகும் என்பதால் 3 மாதத்திற்குள் சப்பரத் தேர் செய்ய எண்ணினார் மன்னர். இதற்காக மர ஸ்தபதியையும் அழைத்து சப்பரத்தேர் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி மர ஸ்தபதியும் மன்னர் மனம் மகிழுமாறும், பிரமி்ப்பாகவும் சிறிய சப்பரத் தேர் செய்து முடித்துள்ளார். அந்த ஆண்டே சுந்தரராஜ பெருமாள் சப்பரத் தேரில் எழுந்தருளிய பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளியுள்ளார். குறித்த காலத்திற்குள் செய்து முடித்த மர ஸ்தபதியை பாராட்டி ஆயிரம் பொற்காசுகள் மன்னர் வழங்கி பாராட்டியுள்ளார். அன்றிலிருந்து சப்பரத்தேர் ஆயிரம் பொன் சப்பரம் என அழைக்கப்பட்டது. அதேபெயரால் தற்போதும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்றுபோனது.

இதற்குரிய சப்பரத்தேர் பராமரிப்பின்றி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் முன்புள்ள மண்டகப்படியில் ஆயிரம் பொன் சப்பரத் தேர் இருப்பதை அறிந்த கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி அதனை சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார். சுமார் 5 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

அதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக சப்பரமுகூர்த்தம் நிகழ்ச்சி நடந்து வருகின்றன. அதன்படி கடந்த ஜன.26ம் தேதி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சப்பரத்தேரில் தலையலங்காரம் கூண்டு அமைக்கும் பணிகள் ஏப்.20ல் நடைபெறவுள்ளன. நூற்றாண்டுக்குப் பின் கள்ளழகர் சப்பரத் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x