Published : 30 Mar 2023 09:02 AM
Last Updated : 30 Mar 2023 09:02 AM

விரைவில் சரண் அடைகிறார் அம்ரித் பால் சிங்

அம்ரித் பால் சிங்

சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் டி' ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார்.

மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது அவர் நேபாளத்தில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செயல்படும் இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், “இந்தியாவில் தேடப் படும் நபரான அம்ரித்பால் சிங் தற்போது நேபாளத்தில் பதுங்கியுள்ளார். அவர் நேபாளத்தில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீஸ் வட்டாரங்கள் நேற்று கூறியதாவது. அம்ரித் பால் சிங், விரைவில் பஞ்சாபுக்கு வந்து போலீஸில் சரண் அடைவார் என நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. அவர் சரண் அடைவதற்கு முன்னதாக, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளிக்கத் திட்டமிட்டு இருந்ததாகவும், பின்னர் தனது மனதை அவர் மாற்றிக் கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அம்ரித் பால் சிங், தனது நண்பர் பப்பல்பிரீத் சிங்குடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிறது. இதில் அவர் டர்பன் இல்லாமலும், முகக்கவசம் அணிந்தவாறும் காணப்படுகிறார்.

அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. டெல்லி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீதியில் கருப்புக் கண்ணாடி, முகக்கவசம் அணிந்தவாறு அம்ரித் பால் சிங் அந்த வீடியோவில் நடந்து செல்கிறார்.

உடன் ஒரு கைப் பையுடன் பப்பல்பிரீத் சிங்கும் நடந்து செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாகவும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்தான் அவர் போலீஸில் சரண் அடைவதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

மோடி மீது புகார்

தலைமறைவாக இருந்து வரும் அம்ரித் பால் சிங் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. நான் போலீஸில் சரண் அடையத் தயாராக இருக்கிறேன். ஒட்டுமொத்த பஞ்சாபையும் காட்டிக் கொடுத்துவிட்டார் பிரதமர்நரேந்திர மோடி. கைதான சீக்கிய இளைஞர்களையும், எனது உறவினர்களையும் அசாமுக்கு அவர்அனுப்பிவிட்டார். பஞ்சாப் மாநிலத்துக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார்.

ஒற்றுமை தேவை

பஞ்சாபின் ஒற்றுமைக்காகவும், சீக்கியர்களின் பாதுகாப்புக்காகவும் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம். பஞ்சாபைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும். நான் சரண் அடையத் தயார். சரண் அடைய நான் பயப்படவில்லை. ஒட்டு மொத்தமாக கைது செய்யப் பட்டுள்ள சீக்கிய இளைஞர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். பஞ்சாப் இளைஞர்களைக் காப்பாற்ற அனைத்து சீக்கிய தலைவர்களும் ஒன்றுபட்டு இயக்கமாக மாற்றவேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் அம்ரித்பால் சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x