Last Updated : 02 Mar, 2023 08:08 PM

30  

Published : 02 Mar 2023 08:08 PM
Last Updated : 02 Mar 2023 08:08 PM

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகள் சொல்வது என்ன? - சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

திரிபுராவை தக்க வைத்த பாஜக: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில தேர்தல்களில் தேசிய அளவில் அதிகம் உற்றுநோக்கப்பட்ட மாநிலம் திரிபுரா. இங்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்ததும், சிபிஎம் வலிமையான எதிர்க்கட்சியாக இருந்ததுமே இதற்குக் காரணம். கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் பாஜக, ஐபிஎஃப்டி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதேநேரத்தில், அதிரடி திருப்பமாக சிபிஎம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. அதோடு, புதிதாக திப்ரா மோதா என்ற கட்சியும் களத்தில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், பாஜக 33 இடங்கள் என்ற தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் நிலையில் உள்ளது. தேர்தலில் புதிய அலையை உருவாக்கிய திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜக கூட்டணி இம்முறை 11 இடங்களில் குறைவாக வெற்றியை பெறுகிறது.

நூலிழை பெரும்பான்மையை கொண்டிருக்கும் பாஜக, தேர்தல் முடிவுகள் வந்ததும் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. திப்ரா மோதாவின் 'கிரேட்டர் திப்ராலேண்ட்' கோரிக்கையைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் என்ற அறிவிப்புதான் அது. அக்கட்சியின் ஆதரவை பெறும் நோக்கில், திரிபுரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரபோர்தி இந்த அறிவிப்பை வெளிட்டார். திரிபுராவில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் சிபிஎம் கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், அதனை திப்ரா மோதா கட்சி தகர்த்துள்ளது.

நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி: நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 37 தொகுதிகளை இந்தக் கூட்டணி கைப்பற்றி இருப்பதால், அவை மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளன. தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெபியூ ரியோ மீண்டும் முதல்வராக உள்ளார். இந்த இரு கட்சிகளைத் தவிர வலிமையான வேறு கட்சிகள் இங்கு இல்லாதது இவ்விரு கட்சிகளுக்குமே மிகப் பெரிய பலமாக இருந்துள்ளது.

மேகாலயாவில் களத்தை இழந்த காங்கிரஸ்: மேகாலயாவில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 தொகுதிகள் தேவை என்பதால் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்க வாய்ப்பு இருக்கிறது. முதல்வர் கன்ராட் கே. சங்மா மீண்டும் முதல்வராவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் வலிமையான கட்சியாக இருந்த காங்கிரஸ், கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது. இம்முறை களத்தையும் இழந்துள்ளது. கடந்த தேர்தலில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், பிரதான எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தையும் அது இழந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இம்முறையும் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற இந்த 3 மாநில தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்பட்டன. இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நடத்தி முடித்த பிறகு நடைபெற்ற தேர்தலாகவும் இந்த தேர்தல்கள் இருந்தன. எனவே, இந்தத் தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்திருந்தால், அது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டிருக்கும். மாறாக, பாஜகவுக்கு சாதமாகவே தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதால் அக்கட்சி உற்சாகம் அடைந்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x