Last Updated : 23 Feb, 2023 06:49 AM

7  

Published : 23 Feb 2023 06:49 AM
Last Updated : 23 Feb 2023 06:49 AM

யாருக்கு இடையிலானது உக்ரைன் போர்?

வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்பட்ட எல்லாப் போர்களின் நோக்கமும் ஒன்றுதான்: அமைதி. ஆனால், அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிய போரை, இதுவரை மக்கள் கண்டதில்லை. “எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தினால்தான் உக்ரைனில் அமைதி சாத்தியம் என்றால், அதற்குத் தயங்க மாட்டோம்” என்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். “நாங்கள் கேட்கும் உதவிகளை மேற்குலம் விரைந்து அளித்தால் ரஷ்யாவை முறிடியத்து அமைதியை நிலைநாட்டிவிடலாம்” என்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி.

ரஷ்யாவின் தார்மிகத் தோல்வி: மேற்குலகம் உக்ரைனுக்குத் தளவாடங்களை அள்ளிஅள்ளிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் போர் நீண்டுகொண்டே போகுமே ஒழிய, நிற்காது என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள். தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் ரஷ்யா, தனது பழம்பெருமிதக் கனவுகளிலிருந்து விழித்துக்கொள்ளாவிட்டால் மீளா இருளில் மாட்டிக்கொள்ளும்; ரஷ்யாவை அழித்தவர் என்னும் பெயர்தான் புடினுக்கு எஞ்சும் என்கிறார்கள் மேற்குலகின் அரசியல் கோட்பாட்டாளர்கள்.

உக்ரைனை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்னும் அறிவிப்போடு கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று இப்போரைத் தொடங்கிவைத்தார் புடின். சுண்டைக்காய் நாடு; நசுக்கிவிட்டுத் திரும்பிவிடலாம் என்னும் நம்பிக்கையோடு கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்கள் உக்ரைனுக்குள் ஊடுருவினர். சில பகுதிகளை அவர்களால் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரவும் முடிந்தது.

மார்ச் இறுதியில் உக்ரைன் சுதாரித்துக்கொண்டு தடுப்பாட்டத்தைத் தொடங்கியது. வடக்கிலும் தெற்கிலும் ரஷ்யர்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றதோடு, இழந்த பகுதிகள் சிலவற்றையும் அந்நாடு மீட்டெடுத்துவிட்டது. அத்துடன் ரஷ்ய வீரர்கள் நிகழ்த்திய போர்க் குற்றங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது.

வலுப்பெறும் உக்ரைன் தேசியம்: உக்ரைனியர்கள் ரஷ்யாவின் பண்பாட்டுத் தாக்கத்துக்கு உள்ளானவர்கள். ரஷ்யா ஓர் அந்நிய நாடாக அவர்களுக்கு இருந்ததில்லை. 1945 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது உக்ரைன்.

சோவியத்தின் உடைவுக்குப் பிறகு சுதந்திரமான, நடுநிலை நாடாக உக்ரைன் மாறியது. என்கிறபோதிலும், ரஷ்யத் தாக்கங்களிலிருந்து முழுக்க விடுபட்டுத் தனித்ததொரு உக்ரைனிய அடையாளத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை. அதற்கான அவசியத்தை புடின் அவர்களுக்கு வலுவாக உணர்த்திவிட்டார்.

புடினின் இந்தப் போர், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உக்ரைனை ஒன்றிணைத்திருக்கிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸில் இருந்த ரஷ்ய ஆதரவாளர்களில் கணிசமானவர்கள் இன்று உக்ரைனிய தேசியவாதிகளாக மாறியிருக்கின்றனர். அணு ஆயுதப் பலசாலியான ரஷ்யாவால் இன்றுவரை போரில் வெல்ல முடியாமல் இருப்பதற்குக் காரணம், பலம்பெற்றுவரும் இந்த உக்ரைனிய தேசியவாத உணர்வுதான்.

வெறுப்பின் இலக்கான ரஷ்யா: ஐநா புள்ளிவிவரங்களின்படி பிப்ரவரி 13 வரை குறைந்தது 7,200 பேர் உக்ரைனில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது 200 குழந்தைகள் இறந்துபோயிருக்கலாம். அதிகாரபூர்வ விவரங்கள் இல்லை என்பதால் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இருதரப்பிலும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம். லட்சக்கணக்கானோர் ஏதிலிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். எந்த அளவுக்குத் தங்கள் நாட்டை நேசிக்கிறார்களோ கிட்டத்தட்ட அதே அளவுக்கு ரஷ்யாவை இன்றைய உக்ரைனியர்கள் வெறுக்கிறார்கள்.

சிதைந்த பிம்பம்: ஸெலென்ஸ்கியின் பிம்பம் பன்மடங்கு வளர்ந்து நிற்கிறது என்றால், புடினின் பிம்பம் கடுகாகச் சிறுத்துக்கிடக்கிறது. புதிதாக எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு, இருப்பதையும் இழந்துவிட்டு நிற்கிறார். ஒரு சிறு ஏற்றமாவது கிடைக்காதவரை, ஒரு கீற்று வெளிச்சமாவது தன்மீது விழாதவரை அவர் இப்போரை நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

போர்க்களத்தைப் பொறுத்தவரை முழு வெற்றி மட்டுமே வெற்றி என்பதால், கிரைமியா உள்பட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிக்காதவரை உக்ரைனைச் சுதந்திர நாடாக அழைக்க முடியாது என்பதை ஸெலென்ஸ்கியும் உணர்ந்திருக்கிறார்.

தன் முழு பலத்தையும் திரட்டிக்கொண்டு ரஷ்யா அடியெடுத்து வைத்தால் உக்ரைன் தாங்காது என்பதையும் அவர் அறிவார். அதனால்தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உரத்த குரலில் அவர் மேற்குலகிடமிருந்து உதவிகளைக் கேட்ட வண்ணம் இருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஐரோப்பியப் பயணத்தின்போது திடீரென உக்ரைன் சென்று ஸெலென்ஸ்கியைச் சந்தித்திருக்கிறார். ரஷ்யாவுக்கு இதுவரை தார்மிக ஆதரவை வழங்கிவரும் சீனா, இனி ஆயுத உதவிகளையும் வழங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கிறது.

பனிப்போரின் நீட்சி: மேற்குலகம், குறிப்பாக நேட்டோவின் பாத்திரம் இந்தப் போரை மேலும் சிக்கலானதாக மாற்றிவிட்டது. நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கித் தன் பரப்பை விரிவாக்கிக்கொண்டே போவதை ரஷ்யாவுக்கான எச்சரிக்கை மணியாகவே புடின் பார்க்கிறார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி உக்ரைனில் தன் ராணுவக் கூடாரத்தை அமைப்பதே நேட்டோவின் இலக்கு. இதை அனுமதித்தால் நாளை ரஷ்யாவின் இருப்புக்கே ஆபத்து நேரலாம் என்கிறார் புடின். நேட்டோவில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா கோபம் கொண்டதன் பின்னணியும் இதுதான்.

உக்ரைனை நேட்டோ உறுப்பினராக்கும் எண்ணமோ அங்கே ராணுவத்தை நிறுத்தும் எண்ணமோ இல்லை என்கிறது நேட்டோ. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதும் உக்ரைனின் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதும்தான் எங்கள் இலக்கு என்கின்றன அமெரிக்காவும் மேற்குலகும். வெளியே சொல்லப்படும் இந்த எளிய நோக்கங்களுக்காக மட்டுமே உக்ரைனின் பின்னால் இவர்கள் அனைவரும் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.

போரைத் தொடர்வது யார்?: உக்ரைன் போர் என்பது உக்ரைனுக்கான போர் அல்ல. இது பனிப்போரின் நீட்சி. அதனால்தான் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் என்று பலவும் பில்லியன் கணக்கில் உக்ரைனுக்குக் கொட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இதை உக்ரைனும் அநேகமாக உணர்ந்திருக்கும். வெளிப்படுத்தாவிட்டாலும் இந்த அடிப்படைப் புரிதலை அனைவரும் கொண்டிருப்பதால், இது விரைவில் முடியப்போகும் போரல்ல என்பதை அனைவரும் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர். எந்தவொரு போரையும்போல் இதுவும் அதில் பங்கேற்பவர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே உள்ளவை போக புதிய கட்டுப்பாடுகளை ரஷ்யா மீது விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிக்கொண்டி
ருக்கிறது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதிச் சங்கிலிகள் பல இடங்களில் அறுபட்டிருப்பதால் அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கிப் பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. எப்பாடுபட்டாவது போரை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு இத்தட்டுப்பாடு அனைவரையும் தள்ளிக்கொண்டிருக்கிறது.

உக்ரைனிலும் சரி, ரஷ்யாவிலும் சரி, மக்களின் விருப்பம் ஒன்றுதான்: போர் முடிய வேண்டும். ஆனால், மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், புவிசார் அரசியல் நோக்கங்களுக்காகத் தலைவர்கள் போரைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையான போர் மக்களுக்கும் அவர்களை ஆளும் தலைவர்களுக்கும் மத்தியில்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பிப். 24: ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு

- மருதன் | எழுத்தாளர், ‘அசோகர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x