Published : 21 Feb 2023 03:52 AM
Last Updated : 21 Feb 2023 03:52 AM

நிலக்கரி ஊழல் புகார் - சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் தலைவரின் வீட்டில் சோதனை நடந்தபோது, வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர்.படம்: பிடிஐ

ராய்ப்பூர்: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல்தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிலக்கரிவரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு,ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்ட விரோதபண பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், நிலக்கரி வரி விதிப்பு முறைகள் தொடர்பாக சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள்,அலுவலங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பிலாய் எம்எல்ஏ தேவேந்திர யாதவ்,சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தலைநகர் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு வரும் 24-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்டிருப்பது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூபேஷ் பாகலுக்கு நெருக்கமாக உள்ள தலைவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் ராம்கோபால் அகர்வால், நாக்ரீக் அபூர்த்திநிகம், சன்னி அகர்வால் கர்மாகர் மண்டல்,ஆர்.பி. சிங், வினோத் திவாரி வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நிலக்கரி ஊழல் தொடர்பாக முதல்வரின் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி சவும்யா சவுராசியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அவரது மோசமான அரசியலுக்கு இது உதாரணம் என்றும் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x