Published : 20 Feb 2023 08:09 PM
Last Updated : 20 Feb 2023 08:09 PM

“தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக சொல்வது உண்மைக்குப் புறம்பானது” - ஜே.என்.யு விளக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது; திரித்துச் சொல்லப்பட்டதாகும்” என்று அந்தப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவர் மையம் ஒன்றில் (Teflas) மாணவர் சிலரும் வெளியாட்களும் சேர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளனர். அப்போது நேர்ந்த குழப்பத்தில், நம் வணக்கத்திற்குரிய தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது; திரித்துச் சொல்லப்பட்டதாகும். இந்த நிகழ்வை தீவிரமாக விசாரிக்குமாறு துணைவேந்தர் பணித்துள்ளார்.

தேசியத் தலைவர்களின் அரும்பணிகளை என்றென்றும் மதித்துப் போற்றிப் பல்கலைக்கழக வளாகத்தில் பன்முகத்தன்மையை நிலைநாட்டுதலும் பல்கலைக்கழக வளாகத்தில் நல்லுறவைப் பேணுதலும் இணைகோடுகளாக அமையவேண்டும் என்பதே துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தினரின் உள்ளார்ந்த விருப்பம். இதற்கு மாறாக யார் நடந்துகொண்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பொதுவான அறை ஒன்றில் நடந்த அந்த நிகழ்வுக்குப் பின்னர், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர் அமைப்பின் சார்பில் ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஏபிவிபி அமைப்பினரின் நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதே அறையில் இருந்ததாகவும், ஆவணப்படம் திரையிட வந்தவர்கள் ஏற்கெனவே நிகழ்ச்சி முடிந்தவர்களை அறையில் இருந்து வெளியேற கூறியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர், அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், "பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x