Published : 25 Dec 2022 06:59 AM
Last Updated : 25 Dec 2022 06:59 AM

திருப்பதி பல்கலை.யில் சிறுத்தை நடமாட்டம் - வீடு திரும்பிய விடுதி மாணவர்கள்

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழகத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட மாணவர்கள், விடுதிகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

திருப்பதியில் அலிபிரி மலையடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன் தினம், திருப்பதி-திருமலை மலைப்பாதையில், விநாயகர் கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர், அந்த சிறுத்தை குட்டியின் உடலை பறிமுதல் செய்து, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிருக காட்சிசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கால்நடை பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ள ஒரு சிறுத்தை, தனது குட்டியை தேடி வருகிறது. இதைக்கண்ட சில மாணவ, மாணவியர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவலை அறிந்த மாணவர்கள், உடனடியாக விடுதிகளை காலி செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

2 இடங்களில் கூண்டு: இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 2 இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு அமைத்துள்ளனர். மேலும், வன ஊழியர்கள் இரவுபகலாக சிறுத்தையைப் பிடிக்கரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கால்நடை பல்கலைக்கழகத்தின் வெளியே, “மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை யாரும் கால்நடை பல்கலைக்கழத்திற்குள் செல்லவோ நடமாடவோ வேண்டாம்” என பேனர் கட்டி பொது மக்களையும் எச்சரித்துள்ளனர். இதனால், திருப்பதி நகரவாசிகளும் பீதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x