Published : 25 Dec 2022 06:21 AM
Last Updated : 25 Dec 2022 06:21 AM

மதுரா | ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்தலாம் - ஜன.20 அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரா: மதுராவில் கிருஷ்ணர் கோயிலுக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் ஜனவரி 2-ம் தேதிக்குப் பிறகு இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தலாம் என்று உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். அங்கு கிருஷ்ணர் கோயில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669 - 70ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்படி, கிருஷ்ண ஜென்ம பூமி பகுதியில் கட்டப்பட்டது என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரா நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘உ.பி.யின் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி கட்டப்பட்டுள்ளது. அந்த மசூதிக்குள் நீதிமன்ற உத்தரவின்படி நடத்திய ஆய்வில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு ஆய்வை கிருஷ்ணர் ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியிலும் நடத்த உத்தரவிட வேண்டும். கிருஷ்ண ஜென்ம பூமியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 13.37 ஏக்கர் நிலத்தை கத்ரா கேசவ் தேவ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மதுரா நீதிமன்றம், “ஷாஹி ஈத்கா மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஜனவரி 2-ம் தேதிக்குப் பிறகு ஆய்வு நடத்தலாம். ஆய்வு அறிக்கையை ஜனவரி 20-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் மறு விசாரணை நடத்தப்படும்” என்று உத்தரவிட்டது.

ஷாஹி ஈத்கா மசூதிக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள விஷ்ணு குப்தா, கிருஷ்ணர் பிறந்த வரலாறு முதல் கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டது வரையிலான வரலாற்று ஆவணங்களை நீதிமன்றத்திலும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார். முன்னதாக கடந்த 1968-ம் ஆண்டு கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கத்துக்கும் ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாகத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் விஷ்ணு குப்தா முறையிட்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் கோயிலும் மசூதியும் அருகருகில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை கிருஷ்ணர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. முன்னதாக இதுபோன்ற வழக்கை மதுரா சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x