Published : 22 Dec 2022 02:39 PM
Last Updated : 22 Dec 2022 02:39 PM

“நேற்று கடிதம், இன்று ஆலோசனை...” - ராகுல் யாத்திரைக்கு நெருக்கடி குறித்து ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்

புதுடெல்லி: "உருமாறிய BF.7 கரோனா வைரஸ் இந்தியாவில் ஜூலையில் கண்டறியப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்குக்கு மத்திய அமைச்சர் புதன்கிழமை கடிதம் அனுப்பிவிட்டு, பிரதமர் நோயின் தீவிரம் குறித்து வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்

ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், நாட்டின் நலன் கருதி யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் புதன்கிழமை ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். மக்களிடம் மிகுந்த வரவேற்பும் செல்வாக்கும் பெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்தவே மத்திய அரசு இவ்வாறு செயல்படுவதாக குற்றஞ்சாட்டிவரும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதற்கு பதில் அளித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை காலவரிசைப்படுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியாவில் 4 பேரை பாதித்துள்ள சீனாவில் வேகமாக பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் BF.7 வகை வைரஸ், குஜராத் மற்றும் ஒடிசாவில் ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டறியப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று (டிச.21) இது தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலைமை குறித்து ஆராய பிரதமர் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லிக்குள் நுழைய இருக்கிறது. இப்போது உங்களுக்கு இந்த கால வரிசை புரிகிறதா?" என்று தெரிவித்துள்ளார்.

மூன்று எம்.பி.,க்கள் நிலைமையின் தீவிரம் குறித்து கவலை தெரிவித்து தனக்கு கடிதம் எழுதிய பின்னர், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே கடிதம் எழுதினேன் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் யாத்திரையை குறிவைத்தை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

சீனாவிஸ் வேகமாக பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் உருமாறிய கரோனா வைரஸ் BF.7 வகை இந்தியாவிற்கு புதியது இல்லை. இந்த வைரஸால் இதுவரை குஜராத்தில் மூன்று பேரும், ஒடிசாவில் ஒருவர் என நான்குபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த உருமாறிய வைரஸ் இந்தியாவில் ஜூலையில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x