Published : 22 Dec 2022 01:42 PM
Last Updated : 22 Dec 2022 01:42 PM

எல்லைப் பிரச்சினை | ராகுல் கேள்விக்கு ஏ.கே.அந்தோணியின் பழைய வீடியோ மூலம் பதிலளித்த மத்திய அமைச்சர்

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு | கோப்புப்படம்

புதுடெல்லி: சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி நாடாளுமன்றத்தில் பேசிய பழைய வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்து, எல்லைப் பிரச்சினை தொடர்பான காங்கிரஸ், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியா- சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி 2013-ம் ஆண்டு சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "யாராவது இந்த வீடியோ பேச்சை ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களுக்கு காட்ட முடியுமா? சுதந்திரத்திற்கு பின்னர் எல்லைப் பகுதியில் வளர்ச்சி பணிகளைச் செய்யாமல் இருந்ததே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஏனெனில், அதுதான் சிறந்த பாதுகாப்பு கொள்கை என அவர்கள் நம்பினர்" என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பகிரந்துள்ள வீடியோவில் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி கூறியிருப்பதாவது: "சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட ஆண்டுகளாக எல்லை பகுதியில் சிறந்த பாதுகாப்புக்கான வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில், வளர்ச்சி பணிகள் இல்லாத எல்லைப் பகுதியே சிறந்த பாதுகாப்பு. எனவே நீண்ட ஆண்டுகளாக எல்லைப் பகுதியில், சாலை வசதி, விமான தளங்கள் போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.

அந்த நேரத்தில் சீனா எல்லைப் பகுதியில் தன்னுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளைத் தொடர்ந்தது. அதனால் அவர்கள் நம்மை விட முன்னேறி உள்ளனர். எல்லலைப் பகுதியில் உள்கட்டமைப்பு ரீதியாக, திறன் அடிப்படையில் அவர்கள் நம்மை விட ஒரு படி முன்னாலேயே இருக்கின்றனர். இதனை நான் ஒத்துக்கொள்கிறேன். இதுதான் கடந்தகால வரலாறு” என்று பேசியுள்ளார்.

முன்னதாக, டிச.9-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய - சீன படைகளுக்கு இடையில் நடந்த மோதல் தொடர்பாக பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது. இந்த விவாகரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வரும் நிலையில், எல்லையில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டது குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லை விவகாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தி வரும்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "எல்லைப் பிரச்சினையை அதன் தீவிரம் காரணமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அமைச்சர், கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எல்லைப் பிரச்சினையை நாங்கள் கொண்டுவந்தபோது அப்போதைய அவைத்தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எல்லைப் பிரச்சினையின் தீவிரம் காரணமாக அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு பதிலாக அவை உள்ளுக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்” என்று கூறினார்.

— Kiren Rijiju (@KirenRijiju) December 21, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x