Last Updated : 15 Apr, 2020 02:16 PM

 

Published : 15 Apr 2020 02:16 PM
Last Updated : 15 Apr 2020 02:16 PM

வரும் 20-ம் தேதிக்குப் பின் சரக்கு லாரி இயங்குமா, தொழிற்சாலை இயங்கலாமா? முழுமையான தகவல்களுடன் வழிகாட்டி நெறிமுறைகள்

கோப்புப்படம்

புதுடெல்லி

மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 2-வது கட்ட லாக் டவுனில் வரும் 20-ம் தேதிக்குப் பின் சரக்கு லாரிப் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்குமா? என்பது குறித்து புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி லாக் டவுன் காலத்தில் வரும் 20-ம் தேதிக்குப் பின் அனுமதிக்கப்படும் தொழில்களின் விவரங்கள்:

நிதித்துறைச் சேவையில் செயல்பட அனுமதிக்கப்படுபவை

  1. ரிசர்வ் வங்கி, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிதிச்சந்தைகள் குறிப்பாக என்பிசிஐ, சிசிஐஎல், பணம் செலுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு.
  2. அனைத்து வங்கிக் கிளைகள், ஏடிஎம், வங்கிச்சேவையில் ஈடுபட்டுள்ள ஐடி நிறுவனங்கள், வங்கியின் முகவர்கள், ஏடிஎம் செயல்பாட்டிலும், பணம் மேலாண்மையில் இருக்கும் நிறுவனங்கள் இயங்க அனுமதி உண்டு.
  3. வங்கிகள் தொடர்ந்து செயல்பட உள்ளாட்சி நிர்வாகங்கள் போதுமான பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சமூக விலகலை வாடிக்கையாளர்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தி, சட்டம் ஒழுங்கு சிக்கல் வராமல் கவனிக்க வேண்டும்.
  4. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, முதலீடு,மற்றும் கடன் சந்தைகளுக்கு அனுமதி.
  5. அனைத்து வகையான காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட அனுமதி.

சமூக நலத்துறையில் அனுமதிக்கப்படும் அம்சங்கள்

  1. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் காப்பகம், மகளிர் காப்பகம், மனநலம் குன்றியோருக்கான காப்பகம், கணவனை இழந்த பெண்கள் காப்பகம் செயல்பட அனுமதிக்கப்படும்.
  2. கண்காணிப்பு இல்லங்கள், பாதுகாப்பு மையங்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்படும்.
  3. சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியங்களை வீட்டுக்கே வழங்க அனுமதி, அங்கன்வாடிகள் செயல்படவும் 15 நாட்களுக்கு ஒருமுறை பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கவும் அனுமதி.

ஆன்லைன் மூலம் கல்வி
அனைத்து விதமான கல்வி நிலையங்களும் மூடப்பட்டு இருக்கும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படும். தூர்தர்ஷன் உள்ளிட்ட மற்ற சேனல்களை கல்விக்காகப் பயன்படுத்தலாம்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு

  1. 100 நாள் வேலைவாய்ப்பு அல்லது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பங்கேற்போர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து பணியாற்ற மட்டுமே அனுமதி.
  2. நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளில் மகாத்மா ஊரக வேலைத்திட்ட ப்பணியாளர்களைப் பயன்படுத்த முன்னுரிமை.
  3. மாநிலங்கள், மத்திய அரசுகள் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்பாசனத் திட்டம், நீர்மேலாண்மைத் திட்டத்துக்கு அனுமதி.

பிற தொழில்கள் என்னென்ன?

  1. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, எரிபொருள்களைக் கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், தேக்கி வைத்தல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு , மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி, விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படும்.
  2. மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படும் மின் திட்டங்கள், பராமரிப்பு, பகிர்மானம் ஆகியவற்றுக்கு அனுமதி.
  3. தபால் நிலையங்கள், தபால் சேவைக்கு அனுமதி.
  4. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சிகள், நகராட்சிகள் ஆகிவற்றில் செயல்படும் கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு, நீர் சுத்திகரிப்புப் பணிகளுக்கு அனுமதி.
  5. தொலைத்தொடர்பு, இண்டர்நெட் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பணியாளர்களுக்கு அனுமதி.

சரக்குப் போக்குவரத்து அனுமதி

  1. மாநிலத்துக்குள்ளும், மாநிலத்துக்கு இடையேயேும் அனைத்து வகையான சரக்குப் போக்குவரத்தும், சரக்குகளை ஏற்றுதல், இறக்குதலுக்கு அனுமதிக்கப்படும்.
  2. விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் சரக்குப் போக்குவரத்து, நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லுதல் போன்றவற்றுக்கு அனுமதி.
  3. சுங்கத்துறை அனுமதியுடன் கப்பலில் இறக்கப்படும் கண்டெய்னர் பெட்டிகள், துறைமுகங்களுக்கு சரக்கு கொண்டு செல்லுதல் அனுமதிக்கப்படும்.

என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கலாம்?

  • சுயதொழிலில் ஈடுபட்டுள்ள எலக்ட்ரீசியன், ஐ.டி.பழுதுநீக்குவோர், பிளம்பர், மோட்டார் மெக்கானிக்குகள், தச்சுத்தொழிலாளர்கள் ஆகியோர் வரும் 20-ம் தேதி முதல் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
  • கிராமப்புறங்களில் செயல்படும் சிறு, குறு தொழிற்சாலைகள் சமூக விலகலைத் தொழிலாளர்கள் பின்பற்றி இயக்க அனுமதி.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்திக் கூடங்கள், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தொழிற்பேட்டையில் செயல்படும் நிறுவனங்கள், தொழில் நகரங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் வரும் 20-ம் தேதி முதல் செயல்படலாம்.
  • இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தங்குமிடத்தை தங்கள் இடத்திலேயே வழங்கலாம்.
  • பாதுகாப்பு, துணை ராணுவம், சுகாதாரம், குடும்ப நலன், பேரிடர் மேலாண்மை, நேரு யுவகேந்திரா, என்ஐசி, எப்சிஐ, சுங்கத்துறை ஆகியவை எந்தவிதமான தடையுமின்றிச் செயல்படலாம்.
  • பிற அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றுவோர், துணைச் செயலாளர்கள், அதிகாரிகள் அந்தஸ்தில் இருப்பவர்கள் 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும். மற்ற பணியாளர்கள் 33 சதவீதம் வரை பணிக்கு வந்தால் போதுமானது.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x