Last Updated : 15 Apr, 2020 01:06 PM

 

Published : 15 Apr 2020 01:06 PM
Last Updated : 15 Apr 2020 01:06 PM

2-வது கட்ட லாக் டவுன்: வரும் 20-ம் தேதிக்குப் பின் வேளாண், மீன்பிடி, கால்நடை, மருத்துவத்துறையில் அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன?

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 2-வது கட்ட லாக் டவுனில் வரும் 20-ம் தேதிக்குப் பின் வேளாண் துறை, மருத்துவத்துறையில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் குறித்து புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல் கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தார்கள்.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி நேற்று மக்களிடம் உரையாற்றினார். வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், வரும் 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் வரும் 20-ம் தேதிக்குப் பின் எந்தெந்தத் தொழில்கள் செயல்படலாம் , யாருக்கெல்லாம் விலக்கு போன்றவற்றை அறிவித்துள்ளது.

அதன்படி மே 3-ம் தேதி வரை தடை நீக்கப்படும் வேளாண்துறை மற்றும் மருத்துவத்துறையில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு:

(அ) ஆயுஷ் உள்பட அனைத்து விதமான மருத்துவச்சேவைகளும் அனுமதிக்கப்படும்

  1. மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம், கிளினிக்குகள், டெலிமெடிசன் அனுமதிக்கப்படும்.
  2. டிஸ்பென்சரி, மருந்தகங்கள், அனைத்து விதமான மருந்துக் கடைகள்,மருத்துவ உபகரணங்கள் விற்கும்கடை, மத்திய அரசின் ஜன் ஔஷதி கடைகள் திறந்திருக்கலாம்.
  3. மருத்துவ சோதனைக்கூடங்கள், மருத்துவ ஆய்வு மாதிரி சேகரிப்பு மையங்கள் கோவிட்-19 நோயாளிகள் குறித்து ஆய்வு நடத்தும் பரிசோதனைக் கூடங்கள், ஆய்வு நிறுவனங்களுக்கு அனுமதி.
  4. கால்நடை மருத்துவமனைகள், டிஸ்பென்சரி, கிளினிக், கால்நடை மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள் விற்பனை செய்யும் கடைகள், சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி.
  5. கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் சேவையில் இருக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவோருக்கு அனுமதி.
  6. மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கேஜ் செய்யப்படும் பொருட்கள் தயாரிப்போர், மூலப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி.
  7. மாநிலங்களுக்குள், மாநிலங்களுக்கு இடையே, மாவட்டங்களுக்கு இடைேய சாலை மார்க்கமாகவோ, அல்லது விமானம் மூலமாகவோ மருத்துவத்துறையைச் சேர்ந்த அனைவரும், அதாவது கால்நடைத்துறை, அறிவியல் ஆய்வாளர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள், ஆய்வகங்களில் பணியாற்றுவோர், ஆம்புலன்ஸில் பணியாற்றுவோர், மருத்துவ சேவைப் பணியாளர்களுக்கு அனுமதி உண்டு.

வேளாண் துறையில் அனுமதிக்கப்படும செயல்பாடுகள்

(அ) அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை தொடர்பான பணிகளும் செயல்படலாம்

  1. விவசாயிகள், விவசாயக்கூலிகள் வயல்களில் வேளாண் பணிகளில் ஈடுபடலாம்.
  2. விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், குறைந்தபட்ச ஆதார விலைக்காக கொள்முதல் அனுமதிக்கப்படும்.
  3. மத்திய அரசால், மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வேளாண் சந்தைகள், கூட்டுறவுச் சந்தைகள் செயல்படலாம்.
  4. வேளாண் தொழிலுக்குத் தேவைப்படும் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகள், வேளாண் உபகரணங்களை பழுதுநீக்கும் கூடங்களுக்கு அனுமதி.
  5. வேளாண் செயல்பாடுகளுக்கு வாடகைக்கு இயந்திரங்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி.
  6. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி.
  7. மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் வேளாண் தொடர்பான இயந்திரங்கள், அறுவடைக் கருவிகள் கொண்டு செல்ல அனுமதி.

மீன்பிடித் தொழிலில் என்ன நடவடிக்கைகள்

  1. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மீன் உணவு, படகுகளைச் சரிசெய்தல், மீன்களை பேக்கிங் செய்தல், பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி.
  2. வர்த்தக ரீதியாக அனைத்துவிதமான மீன்கள், மீன் பொருட்களை, மீன் உணவுகளைக் கொண்டு செல்ல அனுமதி.

பயிர்த் தொழில்களில் என்னென்ன அனுமதி

  1. தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில் 50 சதவீதப் பணியாளர்களை வைத்துப் பணியாற்ற அனுமதி.
  2. தேயிலை, காபி, ரப்பர் போன்றவற்றை பேக்கிங் செய்தல், பதப்படுத்துதல், விற்பனை ஆகியவற்றில் 50 சதவீத பணியாளர்களைப் பயன்படுத்த அனுமதி.

கால்நடைத்துறையில் கவனிக்க வேண்டியவை

  1. பால் கொள்முதல், பால் பொருட்களைக் கொண்டு செல்லுதல், பால் பதப்படுத்துதல், பால் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி.
  2. கோழிப்பண்ணை, கால்நடை பராமரிப்புப் பண்ணைகளை இயக்க அனுமதி.
  3. கால்நடைகளுக்குத் தீவனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி, அந்த நிறுவனங்களுக்கு சோயா, சோளம், மக்காச்சோளம் போன்றவற்றைக் கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு அனுமதி.
  4. கால்நடை பாதுகாப்பு மையங்கள், குறிப்பாக கோசாலைகளுக்கு அனுமதி.

இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் மத்திய அரசு கூறிய வழிகாட்டி நெறிமுறைகள்படியும், பாதுகாப்பு வழிமுறைகளைப்பின்பற்றியும் நடக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் அவசியம்.

மேலும், இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் நடைமுறையில் இருக்கும் தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் செயல்படக்கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x