Last Updated : 27 Aug, 2015 09:09 PM

 

Published : 27 Aug 2015 09:09 PM
Last Updated : 27 Aug 2015 09:09 PM

98 ஸ்மார்ட் சிட்டி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 12 நகரங்கள்

நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள 98 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்பட்டியலில் தமிழகத்திலிருந்து 12 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இப்பட்டியலை வெளியிட்டார்.

இப்பட்டியலில் உத்தரப்பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 13 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிரத்துக்கு 10 நகரங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்துக்கு 7, கர்நாடகா, குஜராத் மாநிலங்களுக்கு தலா 6, பிஹார் மற்றும் ஆந்திராவுக்கு தலா 3, ஹரியாணா, சத்தீஸ்கருக்கு தலா 2, இதர மாநிலங்களுக்கு தலா ஒரு நகரத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அனைத்து யூனியன் பிரதேசங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிவித்தபோது, 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்றார். தற்போது 98 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 நகரங்களின் பட்டியில் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஒரு நகரம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் குறிப்பிடத்தக்க நகரங்களின் அடிப்படையில் 13 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 12 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 13-வது நகரமாக மீரட் மற்றும் ரேபரேலி ஆகிய 2 நகரங்கள் உள்ளன. இரண்டுமே சமமான புள்ளிகளைப் பெற்றுள்ளதால், எந்த நகரைத் தேர்வு செய்வது என்பது மாநில அரசின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக நகரங்கள்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், வேலூர், சேலம், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

இப்பட்டியலில், பிஹாரின் பாட்னா, மகாராஷ்டிரத்தின் மும்பை, கர்நாடகத்தின் பெங்களூரூ ஆகிய நகரங்கள் இடம்பெறவில்லை. பாட்னா மற்றும் பெங்களூரு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பரிந்துரை செய்யவில்லை என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ரூ.48,000 கோடி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

இத்திட்டத்தின் முதல்கட்ட போட்டியானது முழுக்க முழுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் பங்களிப்புடன் நிறைவுபெற்றுள்ளது. இதில், மத்திய அரசு மிகக்குறைந்த அளவே பங்கேற்றது. அடுத்த கட்டமாக இந்த ஆண்டு இறுதியில் 20 நகரங்கள் தேர்வு செய்யப்படும். அடுத்த இரு ஆண்டுகளில் தலா 40 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இன்னும் ஓரிரு நாட்களில், 98 நகரங்களுக்கும் மத்திய அரசு தலா ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த நிதி, ஸ்மார்ட் சிட்டி திட்டமிடலுக்காக பயன்படுத்தப்படும். இந்த திட்டமிடலுக்கு உதவி செய்வதற்காக மண்டல வாரியாக உரிய அமைப்புகளை எங்கள் அமைச்சகம் தெரிவு செய்துள்ளது.

20 நகரங்களைத் தேர்வு செய்வதில், நகர தொலைநோக்குப்பார்வை, உத்தி, செலவினங்கள், அமல்படுத்துவதில் உள்ள பொறுப்புடைமை, புத்தாக்கம் உள்ளிட்ட பரந்துபட்ட அம்சங்கள கருத்தில் கொள்ளப்படும்.

ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்துவதற்காக முதல் சுற்றில் தேர்வு செய்யப்படாத நகரங்கள் தங்களின் செயல்பாட்டை மேம்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளில் மீண்டும் பங்கேற்கலாம். சில நகரங்கள் தகுதி பெறாத நிலையில், இறுதிச் சுற்றில் கூட புதிய நகரங்களின் பெயரை மாநில அரசுகள் பரிந்துரை செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x