Published : 09 Aug 2019 02:35 PM
Last Updated : 09 Aug 2019 02:35 PM

கேரளாவில் ஆகஸ்ட் 15-ல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: பினராயி விஜயன் அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்

கேரளாவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்கள், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கேரளாவில் கடந்த இரு நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மழை மற்றும் வெள்ள மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தினார். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் அமைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு பினராயி விஜயன் கூறியதாவது:
மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். மொத்தம் 315 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 ஆயிரம் பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 22 பேர் பலியாகியுள்ளனர். நாளையும் மழை தொடரும் என எதிர்பார்க்கிறோம். எனினும் ஆகஸ்ட் 15-ம் தேதி மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்கள் பயப்பட வேண்டாம். கனமழையை எதிர்கொள்ள மாநில அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x