Published : 25 Jul 2019 01:23 PM
Last Updated : 25 Jul 2019 01:23 PM

எடியூரப்பாவுக்கு வயது 76: பாஜகவுக்கு கொள்கை சிக்கல்; அரசு அமைப்பதில் தாமதம்

பெங்களூரு

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் தாமதம் நிலவி வரும் நிலையில் அதற்கு எடியூரப்பாவின் வயதும் காரணமாக இருப்பதால் அதுகுறித்து பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது.

மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடியூரப்பா ஆட்சி அமைக்க உடனடியாக உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்து உடனடியாக அவர் ஆளுநரைச் சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரை அவசரப்பட வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

பல அம்சங்களைக் கட்சி மேலிடம் அலசி ஆராய்ந்து வருகிறது. 16 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்தாலும், எடியூரப்பாவின் வயதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அவருக்கு தற்போது 76 வயதாகிறது. 

பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரசு நிர்வாகத்திலும், தீவிர அரசியலிலும் இருக்க வேண்டாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே 75 வயதைக் கடந்து விட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு எம்.பி. பதவி கூட வழங்கவில்லை. 

75 வயதைக் கடந்ததால் குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் பதவி விலகினார். விஜய் ரூபானி புதிய முதல்வராகப் பதவியேற்றார்.  இதன்படி கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு 76 வயதாகிறது. அவரது வயது தடையாக இருப்பதால் அவருக்கு பதில் வேறு ஒருவரைத் தேர்வு செய்யலாமா என்ற எண்ணத்தில் பாஜக தலைமை இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதேசமயம் கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு எடியூரப்பா முக்கியக் காரணம். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கட்சி பிரச்சாரம் செய்தது.  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 28 இடங்களில் 26 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதற்கும் எடியூரப்பாவின் கடினமான உழைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது.

எனவே, தற்போதைய சூழலில் எடியூரப்பாவை ஒதுக்கி வைப்பதும் சிரமம் என்பதால் அவருக்கு வயது பிரச்சினையில் விலக்கு அளிக்கலாமா எனவும் ஆலோசிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கர்நாடக கட்சியின் மற்ற நிர்வாகிகளிடம் அமித் ஷாவும், ஜே.பி. நட்டாவும் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x