Published : 01 May 2024 03:12 PM
Last Updated : 01 May 2024 03:12 PM

24 மணிநேரத்தில் அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் அறிவிப்பு - காங்கிரஸ் தகவல்

புதுடெல்லி: உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான விடை 24 மணிநேரத்தில் தெரிந்துவிடும் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.

அமேதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2-வது தொகுதியாக போட்டியிட்ட, கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இப்போதைய தேர்தலில் இங்கு ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதுபோல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி, உ.பி.யின் ரேபரேலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தியை இரண்டாவது தொகுதியாக அமேதியில் நிறுத்தவும் ராகுலின் சகோதரி பிரியங்காவை ரேபரேலியில் நிறுத்தவும் கட்சி மேலிடத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. எனினும் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காங்கிரஸ் தாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்ளை முடிவு செய்ய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சியின் தேர்தல் கமிட்டி அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, அடுத்த 24 மணிநேரத்தில் இரு தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஜெய்ராம் ரமேஷ், “யாரும் பயப்படவுமில்லை, யாரும் ஓடவுமில்லை. 24 மணிநேரத்தில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x