Last Updated : 05 Apr, 2019 12:00 AM

 

Published : 05 Apr 2019 12:00 AM
Last Updated : 05 Apr 2019 12:00 AM

தேர்தலுக்கு பின் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு முடிவுக்கு வரும். நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

கர்நாடக பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் தொடக்கத்தில் இருந்தே குடும்ப அரசியலை எதிர்த்து வருகிறேன். கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். கட்சித் தலைவர், நிர்வாகியின் பெயரை வைத்தே அரசியலில் ஒருவர் நுழைவதை அனுமதிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. எவ்வித அனுபவமும் இல்லாத ராகுல் காந்தி கட்சித் தலைவரானது தவறானது.

இதே தவறை தற்போது தேவகவுடா செய்கிறார். தனது இரு மகன்களை அரசியலில் பெரிய பொறுப்புகளில் அமர வைத்த அவர், தற்போது பேரன்களுக்கு எம்.பி. சீட் வழங்கியுள்ளார். குடும்ப அரசியல், ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே மண்டியாவில் போட்டியிடும் நிகில் குமாரசாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறேன். எனது முழு ஆதரவையும் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு தெரிவித்துள்ளேன். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.

என்னைப் பொறுத்தவரை மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்ஏற்படும். காங்கிரஸ் - மஜத ஆட்சி முடிவுக்கு வரும். முதல்வர்குமாரசாமியின் தலையெழுத்தையும் இத்தேர்தல் மாற்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x