Last Updated : 08 Jun, 2018 09:02 PM

 

Published : 08 Jun 2018 09:02 PM
Last Updated : 08 Jun 2018 09:02 PM

‘தலித்தாக இருந்து கொண்டு நாற்காலியில் உட்கார என்ன தைரியம்?’- குஜராத்தில் தலித் பெண் மீது தாக்குதல்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சாதி அடக்குமுறைச் சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது.

கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 வயது தலித் பெண்மணி பல்லவிபென் ஜாதவ்.

இந்நிலையில் உள்ளூர்வாசி ஜெயராஜ் வேகத் என்ற நபர் பல்லவிபென் ஜாதவ் நாற்காலியில் உட்கார்ந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்து ‘தலித்தாக இருந்து கொண்டு நாற்காலியிலா உட்காருகிறாய் என்ன தைரியம்?’ என்று அவரை எட்டி உதைத்துள்ளார், இதில் பல்லவிபென் ஜாதவ் கீழே விழுந்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

புகார் அளித்தவர் பல்லவிபென் ஜாதவ்வின் கணவர் கண்பத் ஜாதவ். இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் சாதிவெறி பிடித்த ஜெயராஜ் வேகத் மேலும் 20-25 பேரை அழைத்துக் கொண்டு பல்லவிபென் ஜாதவ் வீட்டுக்குச் சென்று ஆயுதங்களினால் அவரையும் கணவரையும் குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து போலீசார் எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு கொலை முயற்சி, கொள்ளை ஆகிய பிரிவுகளிலும் வழக்குப் போட்டுள்ளது. மேலும் பல்லவிபென்னை தாக்கியவர்கள் அவரது தாலியையும் பறித்துச் சென்றதாகவும் அவரது உறவினர் ஒருவரை நெருப்பு வைத்துக் கொல்லவும் திட்டமிட்டதாக போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பரத் வேகத் என்பவர் பல்லவிபென் மற்றும் அவரது கணவர்தான் தாக்கியதாக புகார் அளித்துள்ளதும் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x