Last Updated : 08 Jun, 2018 08:29 AM

 

Published : 08 Jun 2018 08:29 AM
Last Updated : 08 Jun 2018 08:29 AM

வாரணாசியில் பாலம் இடிந்து விபத்து விசாரணை குழு அறிக்கை தாக்கல்: யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் யார் மீதும் குற்றம் சுமத்தப்பட வில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் கட்டப்பட்டு வந்த பாலம், கடந்த மே 16-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் பலியானார்கள். சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உத்தரவிட்டிருந்தார்.

இதற்காக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஜே.பி.குப்தா, உபி பிரிட்ஜ் கார்ப்பரேஷன் இணை இயக்குநர் ஒய்.கே.சர்மா உள்ளிட்டோர் அடங்கிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாநில பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சஞ்சய் அகர்வாலிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமாக, எவர் மீதும் அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்படவில்லை.

இதுகுறித்து மாநில பொதுப் பணித்துறை வட்டாரம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “இந்த பாலத்தின் குறுக்கே அமைந்த பீம்கள் முறையாக அமைக்கப்படாதது விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு யார் பொறுப்பு என்று குறிப்பிடப்படவில்லை. அதாவது யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. அதேபோல, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழு தனது பணியை சரியாக செய்யவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் எவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. கோடையில் தொடர்ந்து வீசிய புழுதிப் புயல் மற்றும் பாலத்தின் கீழே நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட அதிர்வுகளும் பாலம் இடிய காரணமாக அமைந்தது என்றும் விசாரணை அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றனர்.

பாலம் இடிந்தவுடன் வாரணாசி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) 304, 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், பாலத்தை கட்டிய உ.பி. பிரிட்ஜ் கார்ப்பரேஷனின் பெயர் தெரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் அந்த கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் ராஜன் மித்தல் மற்றும் சில அதிகாரிகள் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x