Published : 30 May 2018 03:11 PM
Last Updated : 30 May 2018 03:11 PM

தனியார் மருத்துவமனை சீர்த்திருத்தம் வரைந்த ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சிபிஐ ரெய்டு: ‘என்னதான் வேண்டும் மோடிக்கு?’-கேஜ்ரிவால் எரிச்சல்

டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு மேற்கொண்டுள்ளது. பொதுப்பணித்துறையில் ஆலோசகர்களை எடுத்த நடைமுறை தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டெல்லி மாநில அரசின் சுகாதாரம், தொழிற்துறை உட்பட பொதுப்பணித்துறை மற்றும் சில துறைகளின் அமைச்சராக இருந்து வருகிறார் சத்யேந்திர குமார் ஜெயின்.

அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ட்விட்டரில் சிபிஐ ரெய்டு குறித்து தெரிவித்துள்ளார். “பொதுப்பணித்துறை படைப்பூக்கமான ஒரு அணியைத் தேர்ந்தெடுத்ததற்காக என் வீட்டில் ரெய்டு. பல்வேறு பொதுப்பணித்துறை திட்டங்களுக்காக திறமையானவர்களை தேர்வு செய்துள்ளோம் சிபிஐ இவர்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ரெய்டில் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் கேஜ்ரிவால் “பிரதமர் மோடிக்கு என்னதான் வேண்டும்” என்று எரிச்சலுடன் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரான சத்யேந்திர ஜெயின் அந்தத் துறைக்கான பல திட்டங்களுக்கு 24 வடிவமைப்பாளர்களைத் தேர்வு செய்ய ஒரு புலனாய்வு அமைப்பை ஈடுபடுத்தி தேர்வு செய்துள்ளார். இந்த புலனாய்வு அமைப்புக்கு இதில் முந்தைய அனுபவம் இல்லாவிட்டாலும் சிறந்த மூளைகளைத் தேர்வு செய்துள்ளனர். நாடு முழுதும் உள்ள பொறியியல் வடிவமைப்புத் துறை கல்லூரிகளுக்குச் சென்று அங்கிருந்து தேர்வு செய்துள்ளனர், இவர்கள் பொதுப்பணித்துறையின் படைப்பூக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 1, 2015 அன்று உருவாக்கப்பட்ட இந்த படைப்பூக்க அணிக்கான முறையான ஒப்புதலை துணை ஆளுநரிடமிருந்து பெறவில்லை என்று புகார் எழுந்தது. 2 ஆண்டுகளுக்காக இந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.5.74 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி அரசின் விஜிலண்ட் துறை அளித்த புகாரின் பேரில் தற்போது சத்யேந்திர ஜெயினுக்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்று சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

இதே சத்யேந்திர ஜெயின் தான் டெல்லி தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு விற்கும் மருந்துகளின் மீதான லாபம் 50%க்கும் மேல் கூடாது என்பது உட்பட தனியார் மருத்துவக் கொள்ளைகளைத் தடுக்கும் சீர்த்திருத்தத்துக்கான முன்வரைவுத் தீர்மானத்துக்குச் சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x