Published : 09 Mar 2024 08:08 PM
Last Updated : 09 Mar 2024 08:08 PM

ஜாபர் சாதிக் கைது பின்னணி முதல் இந்திய டெஸ்ட் அணி சாதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 9, 2024

திமுக - காங். உடன்பாடு: காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கூட்டணியில் சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் இம்முறை திமுக 21 தொகுதிகளில் களம் காண்பது கவனிக்கத்தக்கது.

ஜாபர் சாதிக் கைதும் பின்னணியும்: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் கூறுகையில், “ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழகம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது.

ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுக்கான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவானார். திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளக இருந்த ஜாபர் சாதிக், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி மீட்பு: மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கடத்தப்பட்ட ராணுவ இளநிலை அதிகாரி கோன்சம் கேடா சிங் மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ராணுவ அதிகாரியை பாதுபாப்புப் படை அதிகாரிகள் மீட்டனர்.

திமுகவுடன் மநீம கூட்டணி - கமலுக்கு ஒரு மாநிலங்களவை சீட்: திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கமல்ஹாசன்,"இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் 10+ இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தினர். ஆதவ் அர்ஜுனா அமலாக்கத் துறை சோதனையை எதிர்கொள்வது இது முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சோதனை நடத்தினர்.

யானை சவாரி செய்த பிரதமர் மோடி!: இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட்டார். அவர் யானை சவாரி செய்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி: பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். “பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். பிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப் போவதாகவும், மூன்றாவது அணி அமைக்கப் போவதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திதான்" என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் வருகைக்காக இண்டியா கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காசா பாராசூட் விபத்தில் 5 பேர் பலி: பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதியில் வான்வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கிய போது ஏற்பட்ட பாராசூட் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.

அமேதியில் போட்டியிட அஞ்சுகிறாரா ராகுல்? - பாஜக: மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சுகிறாரா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக 4-1 என டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின்பு, மீதமுள்ள நான்கு போட்டிகளையும் வென்று தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய சாதனையை 112 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. முன்னதாக, 1912-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து எதிரான தொடரில் இங்கிலாந்து அணி இதே சாதனையை படைத்திருந்தது. இப்போது இந்திய டெஸ்ட் அணி சரித்திரம் படைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஊக்கத் தொகை: சரித்திர வெற்றிபெற்ற இந்திய அணிக்கு, வெற்றி பெற்ற சில நொடிகளில் சர்ப்ரைஸ் ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அதன்படி, ஓர் ஆண்டில் 75 சதவீதம் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆடும் லெவனில் இடம்பெறாமல் அணியில் இடம்பெறும் வீரருக்கு ரூ.22.5 லட்சம் வழங்கப்படும்.

அதுவே 50% போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். ஆடும் லெவனில் இடம்பெறாமல் அணியில் இடம்பெறும் வீரருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

'டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' என்கிற பெயரில் இது 2022 - 23 சீசனில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதற்காக ரூ.40 கோடியை பிசிசிஐ ஒதுக்கியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையாக அதனை ஊக்கப்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் இந்திய வீரர்கள் சிலர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்த நிலையில் அவர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x