Published : 09 Mar 2024 07:54 PM
Last Updated : 09 Mar 2024 07:54 PM

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கூட்டணியில் சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் இம்முறை திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் காண்பது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், ‘நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று (மார்ச் 3) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசினர். அதில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி என 10 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பேசிய செல்வப்பெருந்தகை, “திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. எங்களுடைய அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முகுல் வாசினிக் மற்றும் தமிழகத்தின் பொறுப்பாளர் அஜய்குமார் இங்கே வந்துள்ளனர். இந்த உடன்படிக்கை தற்போது கையெழுத்தாகியுள்ளது. 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிபெறச் செய்வார்கள்” என்றார்.

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடுகள் நிறைவு: தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, கொமதேக, ஐயுஎம்எல், மநீம கட்சிகளுடன் தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டுள்ளன. இதில் கொமதேகவுக்கு நாமக்கல், ஐயுஎம்எல்-க்கு ராமநாதபுரம் தொகுதிகள் முதலில் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்பின், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடும் தற்போது முடிவுற்றுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன.

ஒரு தொகுதி அதிகம்: தமிழகத்தில் இம்முறை திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2019-ல் தமிழகம், புதுச்சேரியும் சேர்த்து 40 தொகுதிகளில் திமுக நேரடியாக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விசிக தலா 2 ,மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், ஐஜேகே தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x