Published : 05 Mar 2024 07:34 AM
Last Updated : 05 Mar 2024 07:34 AM
புதுடெல்லி: லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளில் இருவர் மற்றும் 4 பேரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூரில்உள்ள தேசிய நெடுஞ்சாலைஆணைய திட்ட இயக்குநர் அரவிந்த் காலே, ம.பி. ஹர்டாவில் உள்ள ஆணையத்தின் துணை பொது மேலாளர் பிரிஜேஷ் குமார் சாஹு ஆகியோர் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன், மத்திய பிரதேசம் போபால் நகரில் உள்ள பன்சால் கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் அனில் பன்சால் மற்றும் குணால் பன்சால் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களான சத்தர் சிங் லோதி மற்றும் சி.கிருஷ்ணா ஆகியோரும் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்குசொந்தமான இடங்களில் 2 நாட்களாக நடத்திய சோதனையில் ரூ. 1 கோடியே 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
சாலை அமைக்கும் திட்டங்களில் நிலுவையில் இருக்கும் ரசீதுகளுக்கு பணத்தை விடுவித்தல், போலி சான்றிதழ்கள் வழங்குதல், முடிவடையாத திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொள்ள போபாலில் உள்ளஒரு தனியார் நிறுவனம் தனதுஊழியர்கள் மூலமாக தேசியநெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சிலருக்கு தொடர்ந்து லஞ்சம் கொடுத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் ஆணையத்தில்பணிபுரியும் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT