Published : 05 Mar 2024 06:20 AM
Last Updated : 05 Mar 2024 06:20 AM

முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார். இக்கோயிலை மதம், இனம், மொழி பாகுபாடின்றி அனைவரும் வந்து பார்வையிடலாம் என பாப்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாட்டுக்கு அனுமதிஅளிக்கப்படுகிறது. வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் முன்பதிவு செய்திருப்பதால், உள்ளூர் மக்கள் மார்ச் 1 முதல் கோயிலுக்கு வருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், முதல் பொது விடுமுறைநாளான நேற்று முன்தினம் இக்கோயிலுக்கு காலையில் 40 ஆயிரம் பேர், மாலையில் 25 ஆயிரம் பேர் என மொத்தம் 65 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

கோயிலில் பக்தர்கள் கூட்டம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதாக சுமந்த் ராய் என்பவர் பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இதுபோன்ற அற்புதமான ஒழுங்கை நான் பார்த்ததில்லை. மணிக்கணக்கில் காத்திருந்து நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நான் கவலைப்பட்டேன், ஆனால் நாங்கள் அற்புதமான தரிசனம் செய்து மிகவும் திருப்தி அடைந்தோம். இதற்காக அனைத்து பாப்ஸ் தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்களை பாராட்டுகிறேன்” என்றார்.

கோயிலின் கட்டிடக்கலை குறித்து மெக்சி கோவில் இருந்துவந்த லூயிஸ் என்பவர் கூறும்போது, “கற்களில் மிகவும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் வேலைப்பாடுகள் கொண்டதாக இக்கோயிலின் கட்டிடக்கலை உள்ளது. இந்தியாவின் கலாச்சார பாரம் பரியத்தை பார்வையிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கோயிலுக்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

அமெரிக்காவை சேர்ந்த பியூஷ் என்பவர் கூறும்போது, “பன்முகத் தன்மை மற்றும் அனைவருக்குமான ஆட்சி நிர்வாகத்தில் ஐக்கிய அமீரக அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்கு ஒரு சான்றாக இக்கோயிலின் திறப்பு உள்ளது. வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையின் அழகிய பிரதிநிதித்துவமாக இக்கோயில் திகழ்கிறது” என்றார்.

விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x