Published : 16 Sep 2023 06:13 AM
Last Updated : 16 Sep 2023 06:13 AM

நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ - அண்ணாதுரை கூறிய யோசனையை செயல்படுத்த முடியாது

(தேசிய கொடி எரிப்பு, காந்தி சித்திரம், படம் எரிப்பு, சிலை உடைப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மதராஸ் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தின் தொடர்ச்சி..)

உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் அளித்த பதிலின் தொடர்ச்சி..

“இந்த மசோதாவின் வரம்புக்கு அப்பாற்பட்ட சில விவகாரங்கள் குறித்து வி.கே.ராமசாமி முதலியாரும் வேறு சிலரும் விவாதத்தில் குறிப்பிட்டனர். அவை எல்லாம் அத்தகைய செயல்களுக்கு விளம்பரம் தேடித் தருவதைப் போல அமைந்துவிடும். இந்த அரசாங்கத்துக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக கல்யாணசுந்தரம் ஐயம் தெரிவித்தார்.

இப்படியொரு கூட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவர்களுக்கும் இல்லை என்று அவர் கூறட்டும்; தங்களுடைய நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காகக் கடந்த காலங்களில் பலருடன் கூட்டு வைத்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் கம்யூனிஸ்டுகள். காங்கிரஸ் கட்சிக்குமக்களிடையே பெருத்த ஆதரவு இருக்கிறது, எனவே மற்றவர்களுடன் ஆரோக்கியமற்ற கூட்டுவைக்க வேண்டிய தேவை கட்சிக்கு இல்லை.மதவெறிக்கு எதிரான உணர்வு எங்கிருந்தாலும் அதை உடனே அடக்கிவிட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட் டுள்ளது.

“காமராஜரைப் பாராட்டும் விதத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசினாலும், முதலமைச்ச ருக்கு அப்படியொரு அணுகுமுறை அவரிடத்தில் இல்லை. நாயக்கரை காமராஜர் சந்தித்தே பலஆண்டுகள் ஆகிவிட்டன, இப்போது அவரைத்திருத்துவதற்காக நேரில் சந்திக்க வேண்டும்என்று அண்ணாதுரை கூறிய யோசனையைசெயல்படுத்த முடியாது. நாயக்கர் குறித்துஇவ்வளவு உயர்வாகப் பேசிய அண்ணாதுரையே அவரிடம் சென்று அவரைத் திருத்தலாம்.

“இந்த மசோதாவின் வினோதமான தன் மையை மனதில் கொண்டே, மனநோயாளிகள் தொடர்பாகக் கூட சட்டம் இருக்கிறது என்றுகுறிப்பிட்டதை சில உறுப்பினர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர், யாரையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது, மறைமுகமாகக் கூட எந்தத் தனி நபரையும் மனநோயாளி என்று கூறும் எண்ணம் எனக்கு இல்லை.

நாட்டின் கவுரவம் காக்கப்பட வேண்டும்: “என்ன விலை கொடுத்தாவது நாட்டின் கவுரவத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் ஏதேனும் அம்சம் சரியில்லை என்றாலோ, பிடிக்கவில்லை என்றாலோஅதைத் திருத்தக் கோரும் உரிமை அனைவருக்குமே இருக்கிறது. அதற்காக அரசமைப்புச் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்துவேன் என்பது கடுமையான குற்றம், அப்படிச் செய்துவிடாமலிருக்க தண்டனை அவசியப்படுகிறது.

“மக்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த மசோதா அனைத்துவித அவமதிப்புகளையும் உள்ளடக்கியதாக இல்லைஎன்று சிலர் விமர்சித்துள்ளனர். தேசிய கவுரவத்தைக் காப்பாற்றுவது மட்டும்தான் நோக்கம் என்பதால் மற்றவற்றை இதில் சேர்க்க முடியாது. உறுப்பினர்கள் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தடுக்க ஏற்கெனவே சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்கள் வலுவாக இல்லை என்று கருதினால் அவற்றுக்கு உரிய திருத்தங்களைச் செய்துவிடலாம் அல்லது புதிய சட்டத்தையே கூட இயற்றிவிடலாம்.

“தேசிய கவுரவச் சின்னங்களை அவமதிப் பவர்கள் மட்டுமல்லாமல், அப்படிச் செய்யுமாறு ‘தூண்டுகிறவர்களையும்’ தண்டிக்க, இந்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சிலர் கோரினர். குற்றங்களைச் செய்யுமாறு தூண்டுகிறவர்களைத் தண்டிக்க இந்திய தண்டனையியல் சட்டம் இருக்கிறது. அது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் மட்டுமல்ல, வேறுபல சட்டங்களுக்கும் பொருந்தும்படியானது”.

திருத்த தீர்மானம் விலக்கல்:

என்.கே.பழனிசாமி: இந்த மசோதாவை தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு விட வேண்டும் என்று கோரி முன்வைத்த திருத்த தீர்மானத்தைத் திரும்பப் பெறுகிறேன்.

இந்த மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மூலத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, குரல் வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வாக்குச் சீட்டு தந்து வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் என்று கே.ராமசந்திரன் வலியுறுத்தினார். பிறகு வாக்குச் சீட்டு தரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது. 104 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 13 பேர் எதிராகவும் வாக்களித்தனர். திமுக உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் எஸ்.பி.ஆதித்யனும் எதிர்த்து வாக்களித்தனர்.

அடுத்து மசோதாவை உட்கூறு (Clause) வாரியாக விவாதிக்கத் தொடங்கினர்.

தேர்தலை மனதில் கொண்டு காந்தியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் மீதும் இந்த மசோதாவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அதன் 2-வது உட்கூறுக்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தார் பி.எஸ்.சின்னதுரை.

டி.டி.டேனியல் என்ற உறுப்பினர் இன்னொரு திருத்தம் கோரினார். தேசியச் சின்னங்களை அவமதிப்பது, எரிப்பது ஆகியவற்றை ‘வேண்டு மென்றே’ செய்கிறவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

வி.கே.ராமசாமி முதலியார் மூன்றாவது திருத்தத் தீர்மானம் கொண்டு வந்தார். மக்களில் ஒரு பிரிவினரால் புனிதமாகக் கருதப்படும் எந்த ஒரு உருவ பொம்மையும், சிலையும் சித்திரமும், புகைப்படமும் கூட எந்த வகையிலும் அவமதிக்கப்படக் கூடாது என்று அதில் கோரினார். தங்களுடைய மதத்துக்கு அவமதிப்பு என்று மக்களில் ஒரு பிரிவினர் கருதக்கூடிய எந்தச் செயலையும் யாரும் செய்யக் கூடாது என்பது அவருடைய திருத்தத்தின் சாரம்.

தேசிய சின்னங்களை எரிக்க, உடைக்க, களங்கப்படுத்த, சிறுமைப்படுத்த யார் தூண்டினாலும் அவர்களையும் தண்டிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கே.சட்டநாத கரையாளர் கொண்டு வந்தார்.

கே.ராமசந்திரன் மேலும் இரண்டு திருத்த தீர்மானங்களைக் கொண்டு வந்தார். எந்த மதத்தாராலும் புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவங்களையோ, பொருட்களையோ எரிப்பதையும் குற்றமாகக் கருத வேண்டும், அவற்றை எரிப்பவர்களுக்கும் தண்டனை தர வேண்டும் என்று அவர் கோரினார்.

அமைச்சரின் கருத்து நிராகரிப்பு: தேர்தல் தொடர்பாக சின்னதுரை கொண்டுவரும் திருத்த தீர்மானம் நாடாளுமன்றத் தின்அதிகார வரம்புக்குட்பட்டது, மாநில சட்டமன்றத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால்அது குறித்து பேரவைத் தலைவர் விளக்க வேண்டும் என்று அவை முன்னவரும் நிதியமைச்சருமான சி.சுப்பிரமணியம் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார். நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ள சட்டத்துக்கு, இந்தத் திருத்தம் எந்த வகையிலும் ஊறு செய்து விடாது என்பதால் தவறில்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.

டி.எஸ்.ராமசாமிப் பிள்ளை (என்டிசி): எல்லா அரசியல் கட்சிகளுமே காந்தியடிகளை தேசப் பிதாவாக ஏற்றுக் கொண்டுள்ளன. எந்நாளும் சத்தியமே பேச வேண்டும் என்று காந்தி போதித்தார். ஆனால் அது அனைவராலும் காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காக, காந்தி படங்களைப் பயன் படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

உள்துறை அமைச்சர் பக்தவத்சலம்: காந்தியின் பெயரைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமை தங்களுக்கு மட்டுமே வேண்டும் என்று காங்கிரஸ் கருதவில்லை, அதே சமயம் இறக்கும் வரையில் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகத்தான் அவர் இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேறு எந்த அரசியல் கட்சியும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. தேர்தல் ஆதாயத்துக்காக காந்தியைப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.இந்த மசோதா வேறு நோக்கத்துக்காகக் கொண்டு வரப்படுவதால் உறுப்பினர் சின்னதுரையின் திருத்தம் இதற்குப் பொருத்தமாக இல்லை.

சின்னதுரை கொண்டு வந்த திருத்தத்துக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிட்டவில்லை, எனவே அது தோற்றது. தேசியசின்னங்களை ‘வேண்டுமென்றே’ இழிவுபடுத்துவோரை தண்டிக்க வேண்டும் என்று கோரி,உறுப்பினர் டேனியல் பரிந்துரைத்த, ‘வேண்டுமென்றே’ என்ற சொல், திருத்தமாக ஏற்கப்பட்டது.

தண்டனை: மகாத்மா காந்தியின் சிலைகளை அழிப்பவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற மூன்றாவது உட்கூறில் உள்ள வாசகம், ‘அழிப்பு’ என்பதுடன் ‘சேதம்’ என்பதும் சேர்க்கப்பட்டது. உறுப்பினர் டேனியல் பரிந்துரைத்த ‘வேண்டுமென்றே’ என்ற வார்த்தை, இந்த உட்கூறிலும் சேர்க்கப்பட்டது. தேசியக் கொடியை எரித்தால் என்ன தண்டனை என்ற நான்காவது உட்கூறு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது; அரசியல் ஆதாயம் அல்லது வியாபார நோக்கத்துடன் தேசியக் கொடியைப் போன்ற நகல் அல்லது அதைப் போன்ற அடையாளத்தை எவர் பயன்படுத்தினாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை சின்னசாமி முன்மொழிந்தார்.

(தொடரும்..)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x