Published : 15 Sep 2023 05:45 PM
Last Updated : 15 Sep 2023 05:45 PM

“தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி உறுதி” - கே.சி.வேணுகோபால் நம்பிக்கை

கே.சி. வேணுகோபால் | கோப்புப் படம்

ஹைதராபாத்: இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முதல்முறையாக ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. நாளை 2.30 மணி அளவில் செயற்குழு கூடுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் 6 பேர் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளனர். எங்கள் கட்சியின் 4 முதல்வர்கள் உள்பட 84 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நாங்கள் விவாதிக்க இருக்கிறோம். தெலங்கானா உள்ளிட்ட இந்த 5 மாநிலங்களிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்.

தேசிய அளவில் பாஜகதான் எங்கள் பிரதான எதிரி. அதேநேரத்தில், தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதியும் எங்கள் எதிரிதான். அந்தக் கட்சி பாஜகவோடு சேர்ந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் பல்வேறு ஜனநாயக விரோத மசோதாக்களை பாஜக கொண்டு வந்தபோது அவற்றை ஆதரித்த கட்சி பாரத் ராஷ்ட்ர சமிதி. எனவே, பாஜகவும், பாரத் ராஷ்ட்ர சமிதியும் சகோதரர்களைப் போன்றவர்கள். தெலங்கானா மாநில முஸ்லிம்களின் வாக்குகளுக்காக முதல்வர் கே. சந்திரசேகர ராவ், தான் பாஜகவுக்கு எதிரி என்பதுபோல கூறிக்கொள்கிறார். ஆனால், அது உண்மையல்ல" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x