Published : 15 Sep 2023 07:06 PM
Last Updated : 15 Sep 2023 07:06 PM

சனாதன சர்ச்சை | “திமுகவை இண்டியா கூட்டணி கட்சிகள் கண்டிக்காதது ஏன்?” - நிர்மலா சீதராமன் கேள்வி

நிர்மலா சீதாராமன் | கோப்புப் படம்

புதுடெல்லி: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய திமுகவை, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏன் கண்டிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் இதனை கண்டிக்கவில்லை. இண்டியா கூட்டணி இந்துக்களுக்கு எதிராக உள்ளது. அதோடு, இந்தியாவை பிளக்க வேண்டும் எனும் குழுக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கிறது.

சனாதனத்துக்கு எதிராக திமுக பேசுவது புதிதல்ல. அக்கட்சியின் பிரதான கொள்கை அது. திமுகவின் இதுபோன்ற கருத்துக்களால் தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மொழி தடை காரணமாக நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இது குறித்த சரியான புரிதல் இதுவரை ஏற்படாமல் இருந்தது. தற்போது சமூக ஊடகங்கள் வந்துவிட்டதால், அமைச்சர் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பாளர் என யாரும் தேவைப்படுவதில்லை. கடந்த 70 ஆண்டுகளாக திமுக இப்படித்தான் பேசி வருகிறது. உதயநிதியின் பேச்சு சட்டவிரோதமானது. அமைச்சராக பதவி ஏற்கும்போது அவர் எடுத்துக்கொண்ட பிரமாணத்துக்கு எதிரானது” என தெரிவித்துள்ளார்.

உதயநிதி பேச்சு: சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என தெரிவித்திருந்தார்.

ஆ. ராசா பேச்சு: உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவாகப் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, "சனாதன தர்மம் எய்ட்ஸ்-ஐப் போன்றது. பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே அது பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே சனாதன தர்மம் அச்சுறுத்தலாக உள்ளது" என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x