Published : 31 Dec 2017 07:57 AM
Last Updated : 31 Dec 2017 07:57 AM

மும்பை கமலா மில்ஸ் வளாக தீ விபத்து சம்பவம் எதிரொலி: விதிமீறி கட்டிய கட்டிடங்களை இடித்து தள்ளியது மாநகராட்சி

மும்பை கமலா மில்ஸ் வளாக தீவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து நகரின் சில இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பெருமாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

மும்பை மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 ஓட்டல்கள், மது விடுதிகளில் 2 நாட்களுக்கு முன்பு பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 14 பேர் இறந்தனர். மேலும் 55 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதும், தீயணைப்புத் தடுப்பு விதிமுறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.

இந்த நிலையில் மும்பையிலுள்ள விதிமீறல் கட்டிடங்கள், சாலையோர கடைகள்போன்றவற்றை அகற்றுமாறு மும்பை பெருமாநகராட்சி ஆணையர் அஜய் மேத்தா நேற்று உத்தரவிட்டார். இதற்காக 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் ஒட்டல், ரெஸ்டாரண்டுகள், மது விடுதிகள், வணிக வளாகங்களில் விதி மீறல்கள் இருக்கிறதா, தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் இருக்கிறதா, அவசர வழி இருக்கிறதா போன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்யும்.

இந்த நிலையில் தனிப்படையினர் நேற்று மும்பை கமலா மில்ஸ் வளாகத்தையடுத்து ரகுவன்ஷி மில்ஸ் வளாகம், பீனிக்ஸ் மில்ஸ் வளாகத்திலுள்ள விதிமீறல் கட்டிடங்கள், தடுப்புகளை அகற்றினர். பிளாஸ்டிக் கூரைகளை பயன்படுத்தி சாலையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பு போன்றவற்றையும் தனிப்படை அதிகாரிகள் அகற்றினர்.

உரிமையாளர்களுக்கு வலை

இதனிடையே மும்பை கமலா மில்ஸ் வளாக தீவிபத்து சம்பவம் தொடர்பாக மதுவிடுதி உரிமையாளர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிபத்து நடந்த ஐ அபோவ் மது விடுதி உரிமையாளர்கள் ஹிதேஷ் சங்வி, ஜிகர் சங்வி, மற்றொரு உரிமையாளர் அபிஜித் மங்கா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் நபர்களாக போலீஸார் அறிவித்துள்ளனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x