Published : 16 Aug 2023 09:22 AM
Last Updated : 16 Aug 2023 09:22 AM
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை.
டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
எனது கண்களில் சிறு பிரச்சினை உள்ளது. மேலும், நான் எனது வீட்டில் 9.20 மணிக்கு கொடியேற்ற வேண்டிய நிகழ்ச்சி இருந்தது. அதன்பின் காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியேற்ற வேண்டிய நிகழ்ச்சி இருந்தது.
அதனால் செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. பிரதமரின் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு பலமாக இருக்கும். பிரதமர் செங்கோட்டை பகுதியைவிட்டு வெளியேறாமல், வேறு யாரையும் வெளியே செல்ல பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனது மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததாலும், நேரம் பற்றாக்குறை காரணமாகவும் செங்கோட்டை நிகழ்ச்சியை தவிர்ப்பது சிறந்தது என நினைத்தேன்.
இவ்வாறு கார்கே கூறினார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் டெல்லி செங்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
செங்கோட்டை விழா புறக்கணிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் எக்ஸ் (ட்விட்டர்) சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில் ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
எம்.பி.க்கள் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். அதானி பற்றிபேசினால், எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன. மைக்குகள் சுவிட்ச் ஆப் செய்யப்படுகின்றன. நாங்கள் என்ன செய்வது? அதனால் சுதந்திர தினத்தை மக்களுடன் கொண்டாடுகிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT